உறைந்த தோள்பட்டையை (ஃப்ரோஸன் ஷோல்டர்) புறக்கணிக்காதீர்கள்!

Apr 24, 2024

உறைந்த தோள்பட்டை

அவசர கதியில் இயங்கும் நவீன சமுதாயத்தின் தவிர்க்க முடியாத விளைவுகளில் ஒன்றாக தோள்பட்டை வலி மற்றும் விறைப்பு ("உறைந்த தோள்பட்டை" அல்லது “தாளிறுக்க நோய்” என்று அழைக்கப்படுகிறது) கருதப்படுகிறது. நாம் நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே வேலை செய்கிறோம், அத்துடன் நம் அன்றாட வாழ்க்கையில் குறைந்தபட்ச உடற்செயல்பாடு மற்றும் எதிர்பாராத அளவு அதிக மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம், இவை அனைத்தும் நம் உடலை எதிர்மறையாக பாதிக்கின்றன. வலி அதிகமாகும் போது “இனி முறையாக உடற்பயிற்சி செய்ய முயற்சிப்போம்” என்று நினைத்துக் கொண்டு, வலியைக் குறைக்க உதவும் வலி நிவாரணியைப் பயன்படுத்துவோம் அல்லது டீப்-டிஷ்யு மசாஜ் செய்து கொள்வோம்; இதன் விளைவாக வலி தற்காலிகமாகத் தணிந்தவுடன் அதைப் பற்றி மறந்து விட்டு மீண்டும் பிஸியாகி விடுகிறோம். அப்படி விட்டுவிடாமல், உறைந்த தோள்பட்டை வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

உறைந்த தோள்பட்டை ஏற்படும் போது முக்கியமாக 2 வகையான இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன:

  •  உயர்த்துதல் - உங்கள் தோள்களுக்கு மேலே உங்கள் கைகளைத் தூக்கி உயர்த்துதல்
  •  வெளிப்புறச் சுழற்சி - தோள்பட்டைகளிலிருந்து உங்கள் கைகளை சுழற்றுதல்

உறைந்த தோள்பட்டை வலி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தைத் தீவிரமாக பாதிக்கலாம்; வாகனம் ஓட்டுவது, வேலை தொடர்பான பணிகளைச் செய்வது, குளிப்பது அல்லது சுயமாக ஆடை அணிவது போன்றவற்றைச் செய்ய முடியாமல் போகலாம். பொதுவாக தோள்பட்டையில் தொடங்கும் வலி, மெதுவாக நகர்ந்து கழுத்து, கைகள் மற்றும் விரல்கள் வரை கூட பரவக்கூடும்.

உறைந்த தோள்பட்டை எதனால் ஏற்படுகிறது? 

தோள்பட்டை உறைவுக்கான காரணத்தை மிகச்சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம், ஆனால் பொதுவாக தோள்பட்டை மூட்டைச் சுற்றி பெரிதான வீக்கம் காணப்படும். உதாரணமாக ஒரு காயம் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டு, கை நீண்ட காலமாக கவண் நிலையில் இருக்கும் போது, தோள்பட்டையில் உள்ள தசைகள் மற்றும் தசைநாண்கள் பயன்படுத்தப்படாமல் பலவீனமடைகின்றன. காயம் குணமாகி வரும் போது கையை அசைக்காமல் வைக்க வேண்டும் என்கிற நிலையில் உறைந்த தோள்பட்டை ஏற்படலாம். 

குறிப்பாக, பின்வரும் ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அத்துடன் தோள்பட்டை வலி மற்றும் விறைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்:

  • நீரிழிவு நோயாளிகள்
  • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்
  • தைராய்டு நிலைகள் உள்ள நோயாளிகள்
  • நீண்ட காலமாக அசைவின்றி இருக்கும் நோயாளிகள்
  • பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்
  • உடல் பருமனுடன் போராடுபவர்கள்
  • டென்னிஸ், பூப்பந்து அல்லது ஈட்டி எறிதல் போன்ற துறைகளில் உள்ள விளையாட்டு வீரர்கள்

உறைந்த தோள்பட்டை எவ்வாறு கண்டறியப்படுகிறது? 

உங்களுக்கு தோள்பட்டை வலி மற்றும் விறைப்புத்தன்மை ஏற்பட்டால், ஒரு எலும்பியல் மருத்துவரிடம் செல்லும்படி பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் எக்ஸ்-ரே மற்றும் பிற சோதனைகளின் மூலம் மருத்துவர் உங்கள் நிலையை முழுமையாக மதிப்பிடுவார். மூட்டு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், வலிக்கான காரணத்தை தீர்மானிக்கவும் இது உதவுகிறது.

உறைந்த தோள்பட்டைக்கான சிகிச்சை முறைகள் 

உறைந்த தோள்பட்டைக்கான எந்தவொரு சிகிச்சையின் நோக்கமும் இழந்த இயக்க வரம்பை மீட்பதும், வலியை நீக்குவதும் தான். உறைந்த தோள்பட்டை உள்ள எல்லா நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவான சிகிச்சை ஃபிசியோதெரபி ஆகும். தோள்பட்டை தசைகளை நீட்டுவது மற்றும் நீட்டிப்பது, மற்றும் மூட்டினைச் சுற்றியுள்ள தசைநார்களை வலுப்படுத்துவதன் மூலம் மூட்டினை பலப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். கார்டிகோஸ்டிராய்டு ஊசி அல்லது அழற்சி-எதிர்ப்பு ஊசிகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம். மிகவும் கடுமையான நிலைகளில், அறுவைசிகிச்சை நடைமுறைகளும் அதைத் தொடர்ந்து ஃபிசியோதெரபியும் பரிந்துரைக்கப்படலாம்.


தொடர்புடைய வலைப்பதிவு: Carpal Tunnel Syndrome: Causes and Treatment


உறைந்த தோள்பட்டையினால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் சில குறிப்புகள் இதோ:

  • மிகவும் பதப்படுத்தப்பட்ட, பழைய, பேக்கேஜ் செய்யப்பட்ட, அதி-சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், கார்பனேட்டுகள் மற்றும் அதிக சர்க்கரை அடங்கிய பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • கேஃபின், மருந்துகள் மற்றும் மதுபானம் போன்ற தூண்டுதல் அளிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.
  • தீவிர வெப்பம் அல்லது குளிர் வெப்பநிலைக்கு வெளிப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்கவும்.
  • உணவு உண்பதை தவிர்க்காதீர்கள்
  • அதிக எடை தூக்குவதை தவிர்க்கவும். உங்கள் தசைகளை வலுப்படுத்திக் கொள்ள நீங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
  • 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, வலி உள்ள பகுதிகளை வெப்பம் மற்றும் குளிர் அழுத்தங்களுக்கு உட்படுத்தவும்.
  •  சிறிது வலித்தாலும் கூட, பாதிக்கப்பட்ட தோள்பட்டையை மெதுவாக, ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வரவும். வலியின் காரணமாக உடற்பயிற்சியையோ அல்லது அசைவையோ தவிர்க்க வேண்டாம்! அதே நேரத்தில், வலிமிகுந்த எந்த அசைவுகளையும் தவிர்க்கவும். குறிப்பாக உங்களுக்கு எந்த அசைவுகள் ஏற்றது மற்றும் எது ஏற்றதல்ல என்பதை உங்கள் ஃபிசியோதெரபிஸ்ட் தெளிவுபடுத்துவார்.
  • இரவில் பாதிக்கப்பட்ட தோள் பக்கமாக தூங்குவதைத் தவிர்க்கவும். உடலை முறுக்காமல், மல்லாக்காக படுத்து தூங்க முயற்சி செய்யுங்கள்.

வரும் முன் காப்பதே சிறந்தது! 

உறைந்த தோள்பட்டைக்கான சில ஆபத்து காரணிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால், தோள்பட்டை விறைப்பைத் தவிர்ப்பதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பின்பற்றி இந்நிலை ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்யுங்கள்:

  • தசைகளை நீட்டிச் செய்யும் உடற்பயிற்சிகளை நாள் முழுவதும், முறையான இடைவெளிகளில் தவறாமல் செய்யவும்
  • முழு தோள்பட்டை சுழற்சி பயிற்சியை தினமும் செய்யவும்
  • நீங்கள் உட்காரும் தோரணை ஒழுங்காக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்
  • குறைந்த எடை கொண்ட பொருட்களை தூக்குவதில் எதிர்பாராத சிரமம் ஏற்பட்டால் அது உறைந்த தோள்பட்டையின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம் என்பதை அறிந்து, விரைவில் மருத்துவ உதவி பெற்றால், விரைவாக குணமும் அடையலாம்.
  • உங்கள் நீரிழிவு மற்றும் தைராய்டு நிலைகளை கட்டுக்குள் வைத்திருங்கள்.
  • உங்கள் தோள்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், சிரமப்படுத்தாதீர்கள்; உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது விளையாடும் போதோ, முறையாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

மேற்கூறிய உதவிக்குறிப்புகளை தவறாமல் மேற்கொண்டு இந்த நிலை உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; மகிழ்ச்சியான, வலியற்ற வாழ்க்கை வாழுங்கள்!

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved