வழுக்கிய வட்டுடன் (ஸ்லிப் டிஸ்க்) வாழ்வது

Mar 29, 2024

வழுக்கிய வட்டின் அறிகுறிகள்

உங்கள் முதுகுத்தண்டில் உள்ள வட்டு வீங்கினாலோ அல்லது கிழிந்தாலோ, உங்கள் முதுகிலும், சில சமயம் கால்களிலும் கூட, வலி மற்றும் உணர்விழப்பு ஏற்படலாம். இது “வழுக்கிய வட்டு” (ஸ்லிப் டிஸ்க் அல்லது ஹெர்னியேட்டட் டிஸ்க்) என்று அழைக்கப்படுகிறது.

நமது முதுகெலும்பு ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்ட எலும்புகளின் செங்குத்து நெடுவரிசையால் ஆனது. எலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டுக்கள் உடலின் அதிர்ச்சிகரமான செயல்பாட்டை தாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு வட்டின் மையத்திலும் ஒரு மென்மையான ஜெலட்டின் போன்ற பொருளும், வெளிப்புறத்தில் ஒரு பாதுகாப்பு  வளையமும் இருக்கும்; இது முதுகெலும்புகளுக்கு இடையில் அவற்றை தக்க வைக்க உதவுகிறது. முதுகுத்தண்டில் காயம் ஏற்படும் போது, வட்டின் ஜெலட்டின் உட்பொருள் வெளிப்புற வளையத்தின் வழியாக நீண்டு வெளிப்படும்; இதை நாம் “வழுக்கிய வட்டு” (ஸ்லிப்ட் டிஸ்க்) என்கிறோம். 

வழுக்கிய வட்டுக்கான ஆபத்து யாருக்கு அதிகம்? 

மக்களில் 1-5% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது வழுக்கிய வட்டு காரணமாக ஏற்படும் முதுகுவலிக்கு ஆளாகின்றனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் வழுக்கிய வட்டுகள் மிகவும் பரவலாக ஏற்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கிய வட்டுக்கள் உருவாகும் ஆபத்து அதிகம்.

வழுக்கிய வட்டு உருவாவதற்கான முதல் ஆபத்து காரணி புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது கவனிக்கத்தக்கது. புகைப்பிடித்தல், வட்டின் வெளிப்புற வளையத்தையும் மற்றும் உட்புற ஜெலட்டின் போன்ற பொருளையும் பாதிக்கிறது. ஆனால் உண்மையில் நமது ஒவ்வொரு உடல் அசைவிலும் முதுகெலும்பு பாதிப்புக்கான ஆபத்து உள்ளது. கூடைப்பந்து விளையாடும்போதோ அல்லது வெறுமனே குனியும் போதோ கூட இது ஏற்படலாம். 

வழுக்கிய வட்டின் அறிகுறிகள் என்ன? 

முதுகெலும்பில் வீக்கம் எங்கு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து வழுக்கிய வட்டுக்களின் அறிகுறிகள் அமையும்.

கழுத்துப் பகுதியில் வழுக்கிய வட்டுக்கள் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தும்:

  • தோள் பட்டைகளுக்கு இடையிலான வலி
  • தோள்பட்டை மற்றும் கையின் மேற்புறத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் வலி
  • கழுத்து வலி
  • கழுத்தை வளைக்கும் போதோ அல்லது திருப்பும் போதோ ஏற்படும் தீவிரமான வலி
  • கைகளில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

நடு மற்றும் கீழ் முதுகுப் பகுதியில் (இடுப்பு முதுகெலும்பு), வழுக்கிய வட்டுக்கள் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தும்:

  • முதுகு வலி
  • கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
  • ஒரு பக்க பிட்டம் மற்றும் கால்களில் கீழ்நோக்கிச் செல்லும் கடுமையான வலி, சில சமயங்களில் இந்த வலி பாதம் வரை பரவும்

மேற்கூறிய அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம், ஏனென்றால் இவை உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். 

வழுக்கிய  வட்டுக்களுக்கான சிகிச்சை நெறிமுறை என்ன?

வழுக்கிய வட்டு உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு "பாரம்பரிய" அணுகுமுறையே பரிந்துரைக்கப்படுகிறது, அதாவது அறுவைச்சிகிச்சை-அல்லாத சிகிச்சை முறை. பின்வரும் சிகிச்சை முறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டது மேற்கொள்ளப்படலாம்:

  • ஓய்வு மற்றும் அமைதி
  • தோரணைத் திருத்தம்
  • கட்டுப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி
  • வலியைச் சமாளித்தல் (வலி நிவாரணிகள்)
  • ஃபிசியோதெரபி
  • மசாஜ் அல்லது வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் சிகிச்சை

பெரும்பாலான நோயாளிகள் பாரம்பரிய சிகிச்சை முறையிலேயே, 6 வாரங்களுக்குள் முழுமையாகக் குணமடைந்து விடுகிறார்கள். 6 வாரங்களில் அறிகுறிகள் குறையவில்லை என்றால், அறுவைச்சிகிச்சை முறையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதில் வட்டின் சேதமடைந்த பகுதியோ அல்லது வட்டு முழுமையாகவோ அகற்றப்படும். இது மைக்ரோடிஸ்கெக்டோமி என்று அழைக்கப்படும் லேபராஸ்கோப்பி சிகிச்சை ஆகும். அகற்றப்பட்ட வட்டுக்கு பதிலாக மருத்துவர் ஒரு செயற்கை உள்வைப்பு வைக்கலாம் அல்லது முதுகெலும்பை மேலும் வலுவாக்க அந்த இடத்தில் 2 முதுகெலும்புகளைச் சேர்த்து இணைக்கலாம். 

சிகிச்சையின் போது வலியைச் சமாளித்தல்

நீங்கள் குணமடைந்து வருகையில், தொடர்ந்து வலி இருப்பதுடன் உங்கள் உடல் பலவீனமடையலாம். சிகிச்சைத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான வலி மேலாண்மையில் பின்வருபவை பரிந்துரைக்கப்படுகின்றன:

  • வயிற்றை அழுத்தும் வகையில் குப்புறப் படுக்காமல், மல்லாக்காகப் படுத்துத் தூங்குங்கள். நீங்கள் தூங்கும் போது உங்கள் முதுகெலும்பு ஸ்திரமாக இருக்க வேண்டும்.
  • கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். மிதமான கனமுள்ள பொருளைச் சுமக்க வேண்டியிருந்தாலும், அதை உங்கள் உடலுக்கு அருகில் வைத்துக் கொண்டு, உங்கள் முதுகை நேராக நிமிர்த்தி வைக்கவும்.
  • நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது உங்கள் கால்களை ஃபுட்ரெஸ்டில் வைக்கவும்.
  • அதிக நேரம் உட்காருவதையும், திரும்பத் திரும்ப அல்லது நீண்ட நேரம் குனிந்து செய்யும் பணிகளையும் தவிர்க்கவும்.
  • எந்த விதமான கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்யாதீர்கள்.  

வழுக்கிய வட்டு உருவாவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

ஏறக்குறைய நமது உடற்செயல்பாடுகள் எல்லாமே வழுக்கிய வட்டு உருவாகும் ஆபத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும், இந்த ஆபத்தைக் குறைக்க உதவும் சில குறிப்புகள் இதோ:

  • சரியான முறையில் பொருட்களைத் தூக்க வேண்டும் - அதிக எடையுள்ள பொருளைத் தூக்கும் போது உடலை வளைத்து முழங்கால்களை மடக்கி முதுகை நேராக வைக்கவும். 
  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் – அதிகமான உடல் எடை முதுகின் தசைகளில் அழுத்தம் ஏற்படுத்தும்.
  • நீட்டி மடக்குதல்- தினமும் காலையிலும், இரவிலும், மற்றும் 45 நிமிட காலத்திற்கு தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்த பின் ஒவ்வொரு முறையும்.
  • ஹை ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கவும் – விழாக்களில் மட்டுமே அவற்றை அணியுங்கள், மற்றபடி தினசரி பயன்பாட்டுக்கு தட்டையான காலணிகளையே அணியுங்கள்.
  • புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள் - புகைப்பிடித்தல் வட்டுகளை வலுவிழக்கச் செய்யும், அதனால் சிறிய காயங்கள் ஏற்பட்டால் கூட அது மிகவும் கடுமையானதாக மாற வாய்ப்புள்ளது. 

வழுக்கிய வட்டுக்கள் உள்ள நோயாளிகளுக்கு கடுமையான வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை உடனடியாக அளிக்கப்படாவிட்டால், நிலைமை மோசமாகி, நாட்பட்ட முதுகுவலி மற்றும் நரம்பு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக தொடைகளின் உட்புறம், கால்களின் பின்புறம் மற்றும் மலக்குடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணர்விழப்பு ஏற்படலாம். 

ஆனால் கவலை வேண்டாம் - பெரும்பாலான சமயங்களில் தகுந்த மருத்துவ பராமரிப்பு பெற்று, நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டாலே, வழுக்கிய வட்டுக்கள் ஒரு மாத காலத்திற்குள் நன்கு குணமாகிவிடும்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved