மகப்பேறு என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம்! புதிதாகப் பிறந்த குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்கவும் கொண்டாடவுமான நேரம் இது.
ஆனால் மகப்பேற்றுக்கு முன் 10 மாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்த தாயின் நிலை என்ன? மகப்பேற்றுக்குப் பிறகு, 6 முதல் 8 வாரங்களில், புதிய தாயின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இவை அனைத்தும் அந்தத் தாயை சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட வைக்கலாம். புதிய தாய்க்கு நிறைய ஆதரவு தேவை, அப்போது தான் அவளால் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்க முடியும்.
மகப்பேற்றுக்குப் பின் பழைய நிலைக்கு மீண்டு வருவது ஒவ்வொரு தாய்க்கும் வித்தியாசப்படும். உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளை கவனமாகக் கேட்டு பின்பற்றுங்கள், மேலும் உங்களின் அனைத்து பின்தொடர் வருகைகளிலும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு யோனி பிடிப்புகள் (வஜைனல் கிராம்ப்ஸ்) மற்றும் இரத்தப்போக்கு, மார்பகம் விரிவடைவதால் ஏற்படும் வலி, யோனி மற்றும் பெரினியல் (ஆசனவாய்க்கு அருகில்) புண் மற்றும் அளவுக்கதிகமான அசதி போன்றவை ஏற்படலாம். இவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படுபவை தான். இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை பெற்றுத் தர பல மாற்றங்களை ஏற்றுக் கொண்ட உங்கள் உடல், பழையபடி இயல்பு நிலைக்கு உடனடியாகத் திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், கடுமையான யோனி இரத்தப்போக்கு (சராசரியை விட அதிகமானது), தலைச்சுற்றல், மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், கைகள் அல்லது கால்களில் திடீர் வீக்கம் அல்லது வலி, தடிப்புகள் அல்லது அடிவயிற்றில் தொடர்ந்த வலி ஆகியவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
மகப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம் – உடல்ரீதியான மாற்றங்கள், உளவியல்ரீதியான மாற்றங்கள் மற்றும் சமூகவியல்ரீதியான மாற்றங்கள்.
உடல்ரீதியான மாற்றங்கள்
மகப்பேற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிறப்புறுப்பு புண் மற்றும் திரவ வெளியேற்றம் பொதுவாக ஏற்படும். பிரசவத்தின்போது யோனி கிழியக்கூடும், அதன் விளைவாக வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். அதைப் போக்க ஒரு டோனட் தலையணையின் மீது நீங்கள் உட்கார்ந்து சிறிது ஆறுதல் பெறலாம் அல்லது வீக்கத்தை குளிர்விக்க ஐஸ்பேக் பயன்படுத்தலாம். சில தாய்மார்களுக்கு மாதவிடாய் பிடிப்புகள் போன்று உணரக்கூடிய பிடிப்புகள் தொடர்ந்து ஏற்படக்கூடும், இது “பின்வலி” எனப்படும். மகப்பேறு உங்கள் இடுப்பு (பெல்விக்) தசைகளையும் பாதிக்கக்கூடும், இதன் விளைவாக தும்மல், சிரிப்பு அல்லது இருமல் ஏற்படும் போது சிறிதளவு சிறுநீர் கசிவு ஏற்படலாம். உங்கள் இடுப்பு தசைகளை வலுப்படுத்த “கிகெல்” (Kegel) பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அளவுக்கு அதிகமான வலியை நீங்கள் அனுபவித்தால், வலிநிவாரணிகள் மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக உங்கள் மருத்துவரை அணுகவும்.
மகப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மிக முக்கியமான உடல் மாற்றங்களில் ஒன்று உங்கள் மார்பகங்கள் விரிவடைவது ஆகும். உங்கள் குழந்தைக்கு உணவூட்ட மார்பகங்கள் பால் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, அதனால் அவை பெரிதாகி, திசுக்களில் பால், இரத்தம் மற்றும் பிற திரவங்கள் நிரம்புகின்றன. இதனால் மார்பகங்கள் மிகவும் மென்மையாக இருப்பதுடன், வலி ஏற்படலாம். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இரண்டு மார்பகங்களிலும் ஒரே நேரத்தில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்க, மார்பகங்களுக்கு இடையில் மாறி மாறி ஊட்டவும். உங்கள் குழந்தைக்கு பாட்டிலில் இருந்து பால் புகட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தாய்ப்பாலைப் பிரித்தெடுத்து (எக்ஸ்பிரஸ்) பாட்டில்களில் சேமித்து வைக்க உதவும் மார்பகப் பம்ப்-ஐ பயன்படுத்தலாம். அப்படிச் செய்வதால், பாட்டிலில் சேமித்திருக்கும் தாய்ப்பாலை உங்கள் துணைவரோ அல்லது மற்ற பராமரிப்பாளரோ குழந்தைக்குப் புகட்டும் வேளையில் நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம். தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும், அதை பம்ப் செய்த தேதி மற்றும் நேரத்தை பாட்டில்களில் குறித்து வைக்க மறக்காதீர்கள்.
Also Read: Tips for Successful Breast Feeding
தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் கூடும் எடை, மகப்பேற்றுக்குப் பிறகு குறைய நீண்ட காலம் ஆகலாம். மனம் தளர வேண்டாம் – உடற்பயிற்சியின் மூலம் காலப்போக்கில் எடை குறைந்துவிடும், அதனால் அந்தக் கவலையை விடுத்து ஓய்வுக்கு முன்னுரிமை கொடுங்கள். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி செய்வதே போதுமானது, கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான, சமச்சீரான உணவை உண்பது முக்கியம். தாயின் உடல் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பதால், அது மீண்டு வர தேவையான நேரத்தை வழங்கி நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
மகப்பேற்றுக்குப் பிந்தைய காலத்தில், உங்கள் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படலாம். இதன் விளைவாக முடி உதிர்தல் மற்றும் தோல் அமைப்பில் மாற்றம் போன்றவை ஏற்படலாம். இது சாதாரணமாக உள்ளது தான், மேலும் வீட்டு வைத்தியம் மற்றும் வழக்கமான தோல் மற்றும் முடி பராமரிப்பின் மூலம் இதனை மீட்டுவிடலாம். உங்களுக்கு மகப்பேற்றுக்குப் பின்பான பிரசவ வடுக்கள் (ஸ்ட்ரெச் மார்க்ஸ்) இருந்து அதன் காரணமாக உங்களுக்கு கூச்சமும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்பட்டால், மருந்தகங்களில் கிடைக்கும் (OTC) ஸ்ட்ரெச் மார்க் கிரீம்களை பயன்படுத்தலாம். தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு வழக்கங்களை நீங்கள் தொடர்ந்து முறையாக பின்பற்ற வேண்டும் அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
உளவியல்ரீதியான மாற்றங்கள்
மகப்பேற்றுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள் அனைத்தும் இளம் தாய்மார்களுக்கு உணர்ச்சி மிகுதியை ஏற்படுத்தலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இவை இன்னும் அதிகமாகலாம். இதனை “பேபி ப்ளூஸ்” என்பார்கள், மகப்பேற்றுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. இது பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் எரிச்சல், சீரற்ற மனநிலை மற்றும் அமைதியின்மை ஏற்படலாம். குழந்தையின் தொடர்ச்சியான அழுகை கூட சில தாய்மார்களை பெரிதும் பாதிக்கிறது, அந்த அழுகையை எதிர்கொள்ள முடியாமல் தாங்கள் ஒரு மோசமான தாய் என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். “பேபி ப்ளூஸ்” 4 வாரங்களுக்கு மேல் நீடித்தால், அதற்குக் காரணம் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வாக இருக்கலாம். தான் மதிப்பிழந்து விட்டது போன்ற உணர்வு, தான் ஒரு நல்ல தாய் அல்ல என்ற குற்றஉணர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். சில பெண்கள் தங்கள் குடும்பங்களிலிருந்தும், புதிய குழந்தையிடமிருந்தும் விலகிச் செல்லலாம். 2 முதல் 4 வாரங்களுக்கு மேல் இத்தகைய உணர்வுகளுடன் நீங்கள் போராடுவதாகத் தோன்றினால், தயவுசெய்து ஒரு தொழில்முறை ஆலோசகரின் உதவியை நாடுங்கள். அவரது உதவியினால் நீங்கள் மீண்டும் உற்சாகமான மனநிலைக்குத் திரும்பலாம், உங்கள் குழந்தையையும் தாய்மையையும் நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
சமூகரீதியான மாற்றங்கள்
பல சமயங்களில் ஒரு புதிய குழந்தையின் வரவு, குடும்பத்தினர் அனைவரின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும். குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பெற்றோர் இருவரும் குழந்தை மீது அதிக நேரம் கவனம் செலுத்துவதால் தங்களிடையேயான உறவில் நேரம் குறைவதாக உணரலாம். அதனால் தங்களுக்கு இடையேயான உறவைப் பேண பெற்றோர் சிறிது நேரத்தை ஒதுக்குவது முக்கியம். தாத்தா-பாட்டி அல்லது நெருங்கிய நண்பர் அல்லது மற்ற உறவினரிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு உங்கள் துணைவருடன் சிறிது நேரமாவது செலவிடுங்கள். புதிய குழந்தையின் வரவால் உங்களின் மூத்த குழந்தைகள் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தால் அதையும் கவனிப்பது முக்கியம். புதிய குழந்தையின் மீது கவனம் செலுத்துவது கண்டிப்பாக முக்கியம் என்றாலும், உங்களின் மற்ற எல்லா உறவுகளையும் பராமரிப்பதும் முக்கியமானது. இதைச் செய்வதற்கான சிறந்த வழி உங்கள் மீதும் குழந்தையின் மீதும் அக்கறை கொண்ட, குழந்தைப் பராமரிப்பில் பங்குபெற விரும்பும் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் உதவியை நீங்கள் பெறுவது தான். அவர்களின் ஆதரவுடன் நீங்கள் புதிய குழந்தையும், உங்களின் மற்ற உறவுகளையும் சம அளவில் நன்கு பேணி, குடும்ப ஒற்றுமையை உறுதிசெய்து கொள்ளலாம்.