கல்லீரல் என்பது நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சுகள், கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவும் “பைல் (Bile)” என்ற திரவத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், கொழுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை செயலாக்கம் செய்வதன் மூலம் இது செரிமானத்துக்கும் உதவுகிறது.
தற்காலத்தில் நிலவும் உடற்செயல்பாடற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, கல்லீரல் பாதிப்பு முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகிவிட்டது. ஆனால் கவலை வேண்டாம் – ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கல்லீரல் பாதிப்பை நன்கு நிர்வகித்து நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
கல்லீரல் சேதமடைந்தால் என்ன ஆகும்?
கல்லீரல் சேதமடைந்தால், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இதன் விளைவாக இரத்தத்தில் நச்சுகள் குவிதல், செரிமானக் கோளாறு, உடலில் திரவத் தேக்கம் மற்றும் வீக்கம், அழற்சி மற்றும் வடு (சிரோசிஸ்), தொற்றுநோய்களுக்கான அதிகரித்த ஆபத்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கல்லீரல் முழுமையாக செயலிழந்து போகுதல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும்.
கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்
கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், ஏனென்றால் சரியான நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கும் கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கும் அது உதவும். உங்களுக்கு கல்லீரல் பிரச்சினை இருக்கலாம் என்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளைப் பார்க்கலாம்:
- உடலில் திரவத் தேக்கம் (“அஸைட்டீஸ்”): அடிவயிற்றில் ஏற்படும் திரவத் தேக்கம் “அஸைட்டீஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரல் திசுக்களில் வடுக்கள் உருவாகும் ஒரு நிலை ஆகும். இதற்குக் காரணம் நாட்பட்ட குடிப்பழக்கம், ஹெபட்டைடிஸ் அல்லது பிற கல்லீரல் நிலைகளாக இருக்கலாம். கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, “போர்ட்டல்” சிரையில் (கல்லீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரை) இரத்த அழுத்தம் அதிகரிக்கும், அதனால் திரவம் வயிற்றுக்குள் கசிந்து, அஸைட்டீஸ் ஏற்படுகிறது.
அஸைட்டீஸின் அறிகுறிகளில் தொப்பையின் அளவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு, மூச்சுத் திணறல், கணுக்கால் வீக்கம், முதுகுவலி, வயிற்று உப்புசம் மற்றும் வலி, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும்.
- மஞ்சள் காமாலை: இரத்த சிவப்பணுக்கள் செயலிழக்கும் போது உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளான “பைலிரூபின்” அளவு அதிகரிப்பதால், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். இதை தான் “மஞ்சள் காமாலை” என்கிறோம், இது கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கிறது.
மஞ்சள் காமாலையின் அறிகுறிகளில் தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீர் அடர்த்தியாக இருத்தல் மற்றும் மலம் வெளிரான களிமண் நிறமாக இருத்தல், காய்ச்சல் மற்றும் குளிர், வயிற்று வலி ஆகியவை அடங்கும்.
Also Read: Causes And Treatment Of Cirrhosis Of Liver
- எளிதில் சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படுதல்: இரத்த உறைவுக்குத் தேவையான புரதங்களை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. கல்லீரல் சேதமடைந்தால், இந்த புரதங்களின் உற்பத்தி குறையும். அப்போது உங்களுக்கு சிறிய காயங்கள் அல்லது வெட்டுக்கள் ஏற்பட்டால் கூட, அதன் விளைவாக சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
- குமட்டல் மற்றும் பசியின்மை: கல்லீரல் செயல்பாடு குறைந்தால் இரத்தத்தில் நச்சுகள் குவிந்து, அதன் விளைவாக தொடர்ச்சியான குமட்டல் ஏற்படலாம். கல்லீரல் பாதிப்பு அதிகரிக்கும் போது, அது பெரும்பாலும் பசியின்மை, உடல் எடை இழப்பு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
- வயிற்று வலி மற்றும் வீக்கம்: வயிற்றின் மேற்புற வலது பகுதியில் கல்லீரல் அமைந்துள்ளது. கல்லீரல் பாதிப்பு இந்தப் பகுதியில் வீக்கம், மற்றும் மந்தமான வலியை ஏற்படுத்தலாம். திரவத் தேக்கம் அல்லது அஸைட்டீஸ் ஏற்பட்டால், வயிற்றுப் பகுதி முழுவதும் வலி தோன்றலாம்.
கல்லீரல் பாதிப்புக்கான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்
வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் முதல் தொற்றுக்கள் வரை பல்வேறு காரணிகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். மிகவும் பொதுவான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகளைப் பார்ப்போம்:
- குடிப்பழக்கம்: அதிகப்படியாக மற்றும் நீண்டகாலமாக மது அருந்துதல் கல்லீரல் பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். இது கல்லீரல் கொழுப்பு நோய், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் (கல்லீரல் திசுக்களின் மேம்பட்ட வடுக்கள் அதன் செயல்பாட்டை சீர்குலைத்தல்) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
- ஹெபட்டைடிஸ் தொற்றுகள்: வைரஸ் தொற்றுகள், குறிப்பாக ஹெபட்டைடிஸ் ஏ, பி மற்றும் சி ஆகியவை, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி, நாட்பட்ட கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். ஹெபட்டைடிஸ் ஏ தொற்று அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது, மற்றும் ஹெபட்டைடிஸ் பி மற்றும் சி தொற்று இரத்தம் அல்லது உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது, அத்துடன் இது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.
- குடிப்பழக்கத்துடன் தொடர்பில்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD): மது அருந்துவதன் விளைவாக அல்லாமல் கல்லீரலில் கொழுப்பு படிவது NAFLD எனப்படுகிறது. உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்க்குறி, மற்றும் அதிக அளவு சர்க்கரை உள்ள பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவற்றை உண்ணும் மோசமான உணவுமுறை ஆகியவை இதற்கான சில காரணிகள் ஆகும்.
- நச்சுப்பொருட்கள் மற்றும் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு: “அஸிட்டோமினோஃபென் (பாராசிட்டமால்)” போன்ற சில மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். தொழில்துறை இரசாயனங்கள் அல்லது சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு வெளிப்படுவதாலும், காலப்போக்கில் கல்லீரல் சேதம் ஏற்படலாம்.
- ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்: நமது நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக கல்லீரல் செல்களைத் தாக்கி, வீக்கம் மற்றும் வடுக்களை ஏற்படுத்தும் போது ஆட்டோஇம்யூன் நிலைமைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, ஆட்டோஇம்யூன் ஹெபட்டைடிஸ் – இதற்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது நாட்பட்ட கல்லீரல் நோயாக மாறலாம்.
- மரபணு கோளாறுகள்: “ஹீமோக்ரோமாடோசிஸ்” (அதிகப்படியான இரும்புச்சத்து சேமிப்பு) அல்லது “வில்சன் நோய்” (அதிகப்படியான தாமிரச்சத்து குவிப்பு) போன்ற பரம்பரை நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது கல்லீரலை பாதிக்கும்.
- நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்டம்: நாட்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, அளவுக்கதிகமாக சாப்பிடுதல், மது அருந்துதல் அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை புறக்கணித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் ஏற்படலாம், இது மறைமுகமாக கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இறுதியாக
நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் நமது கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் கொழுப்பு நோய் அல்லது லேசான ஹெபட்டைடிஸ் போன்ற ஆரம்பக்கட்ட நிலைமைகளை பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு மூலமே நாம் சரிப்படுத்தி விடலாம். “சிரோசிஸ்” அல்லது கடுமையான வடுக்கள் போன்ற மேம்பட்ட நிலைமைகளை குணப்படுத்த இயலாது என்றாலும், மேலும் சேதம் ஏற்படுவதை தடுக்க மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை வழங்க முடியும்.