கார்பல் டன்னல் சிண்ட்ரோம் என்றால் என்ன?
கார்பல் டன்னல் சிண்ட்ரோம் என்பது கை, மணிக்கட்டு மற்றும் முன்கையைப் பாதிக்கும் ஒரு நரம்பு-தொடர்பான நோயாகும். மணிக்கட்டில் உள்ள “கார்பல் டன்னல்” என்ற பகுதியில் இருக்கும் மீடியன் நரம்பின் மீது ஏற்படும் அழுத்தம் அல்லது இறுக்கத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. இந்த பாதிப்பு பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
கார்பல் டன்னல் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான காரணங்கள்
“கார்பல் டன்னல்” வழியாகச் செல்லும் நரம்புகளையும் தசைநார்களையும் உள்ளடக்கும் வகையில் கார்பல் டன்னல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கட்டை மெலிதாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கிறது. இந்த மணிக்கட்டைச் சுற்றி ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால், அந்த அழுத்தம் மீடியன் நரம்பின் மீது செலுத்தப்படும்.
மூட்டுவலி, மணிக்கட்டு சுளுக்குகள், மணிக்கட்டு எலும்பு முறிவுகள் மற்றும் கேங்க்லியன் நீர்க்கட்டிகள் ஆகியவை கார்பல் டன்னல் சிண்ட்ரோம் அறிகுறிகளைத் தூண்டும் வீக்கம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். குரோஷே அல்லது பின்னல் போன்ற தொடர்ச்சியான கை மற்றும் மணிக்கட்டு அசைவுகளால் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும் கார்பல் டன்னல் சிண்ட்ரோம் ஏற்படலாம். டிரில் அல்லது ஜாக்ஹேமர் போன்ற அதிர்வுறும் கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு இயற்கையாகவே மெல்லிய மணிக்கட்டுகள் இருப்பதால் அவர்களது கார்பல் டன்னல்களும் குறுகலாக இருக்கும், அதன் காரணமாக அவர்களுக்கு கார்பல் டன்னல் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், சிலருக்கு மரபணு ரீதியாகவே குறுகிய கார்பல் டன்னல்கள் இருக்கலாம்.
கார்பல் டன்னல் சிண்ட்ரோமின் அறிகுறிகள்
கார்பல் டன்னல் சிண்ட்ரோமின் அறிகுறிகள் பொதுவாக ஆரம்பத்தில் லேசாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் மோசமடையும். ஆரம்பத்தில், நோயாளிகளுக்கு விரல் நுனிகளில் லேசான மரத்துப்போகுதல் மற்றும் கூச்ச உணர்வு, ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். இந்த நிலை மோசமடையும்போது, தங்கள் விரல்கள் வழியாக எரிச்சலுணர்வு, வலி மற்றும் அதிர்ச்சி போன்றவை உடலெங்கும் பரவுவது போல நோயாளிகள் உணரக்கூடும். அவர்களின் பிடிப்பு வலிமையும் பலவீனமாக இருப்பதை அவர்கள் உணரலாம். ஆடைகளில் பொத்தான்களைப் போடுவது அல்லது பேனாவால் எழுதுவது போன்ற நுண் இயக்கத் திறன்களும் சிரமமாக இருக்கலாம். குறிப்பாக, இரவில் விரல்கள் வீக்கமடையலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு முன்கை வரை கூட வலி பரவலாம்.
இந்த நிலை குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
உங்கள் மணிக்கட்டுகளில் கூச்ச உணர்வு வலிகள் அல்லது திடீர் மரத்துப்போகுதல் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் மிகவும் பொதுவாக ஏற்படுவது என்றாலும் பிரச்சனையின் முதல் அறிகுறி தென்பட்டவுடனேயே அதற்கு சிகிச்சை அளிப்பது நல்லது.
உங்கள் விரல்கள், உள்ளங்கை மற்றும் மணிக்கட்டை உங்கள் மருத்துவர் பரிசோதித்து, உங்கள் அறிகுறிகளைப் பற்றிக் கேட்பார். உங்கள் விரல்களின் வலிமையையும் நரம்பு உணர்திறனையும் அவர் சோதிக்கக்கூடும். அறிகுறிகள் எப்போது தொடங்கின, எப்போதெல்லாம் நிகழ்ந்தன (அறிகுறிப் பதிவேட்டில் குறித்துக் கொள்ளலாம்) மற்றும் எந்தச் செயல்பாடுகள் அவற்றை தூண்டின போன்ற விவரங்களை நீங்கள் மருத்துவரிடம் கூறினால் உதவியாக இருக்கும்.
கார்பல் டன்னல் சிண்ட்ரோம் – நோய் கண்டறிதல்
இந்த நிலையைத் துல்லியமாகக் கண்டறிய, பல்வேறு உடல் மற்றும் இமேஜிங் சோதனைகள் செய்யப்படும். இதில் பல்வேறு எலக்ட்ரோடயக்னாஸ்டிக் சோதனைகளும் அடங்கும். மீடியன் நரம்பு வழியாகப் பயணிக்கும் சமிக்ஞைகளை அளவிட, ஒரு நரம்பு கடத்தல் ஆய்வு செய்யப்படும். உங்கள் உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் உள்ள தசைகளின் மின் செயல்பாட்டை அளவிட ஒரு EMG சோதனையும் செய்யப்படும். நரம்பு அழுத்தம் உள்ளதா எனச் சரிபார்க்க மருத்துவர் ஒரு அல்ட்ராசவுண்ட் சோதனையையும் செய்வார்.
டினெல் சோதனை போன்ற உடல் சோதனையையும் மருத்துவர் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நரம்பு சேதத்தின் அறிகுறிகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனையாகும் இது. மருத்துவர் மீடியன் நரம்புக்கு மேலே உள்ள தோலைத் தட்டி, அந்த உணர்வை விவரிக்கச் சொல்வார். உங்களுக்கு கூச்சஉணர்வு ஏற்பட்டால், அது அந்த இடத்தில் நரம்பு சேதம் இருப்பதைக் குறிக்கலாம். கார்பல் டன்னல் சிண்ட்ரோமைக் கண்டறிவதில் ஃபேலன் சோதனையும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கைகளின் பின்புறத்தை ஒன்றாகக் கூப்பி, முழங்கைகளை மார்பு மட்டத்திற்கு மேலே உயர்த்தும் ஒரு கை அசைவைச் செய்யுமாறு மருத்துவர் உங்களைக் கேட்பார். நீங்கள் அந்த நிலையில் சுமார் ஒரு நிமிடம் இருக்க வேண்டும். உங்கள் விரல்களிலும் உள்ளங்கைகளின் ஓரங்களிலும் எவ்வளவு விரைவில் கூச்ச உணர்வு ஏற்படத் தொடங்குகிறது என்பதைக் கொண்டு, நரம்பு பாதிப்பின் அளவை மருத்துவர் அறிந்துகொள்ள முடியும்.
கார்பல் டன்னல் சிண்ட்ரோமிற்கான சிகிச்சை
கார்பல் டன்னல் சிண்ட்ரோமின் ஆரம்ப கட்டங்களில், அறுவை சிகிச்சை அல்லாத முறையிலேயே சிகிச்சை அளிக்க முடியும். அவற்றில் பின்வருபவை அடங்கும்:
பிளவுபட்டை (ஸ்பிண்ட்) – மணிக்கட்டைச் சுற்றி, குறிப்பாக இரவில், ஒரு பிளவுபட்டையை அணிவது, மணிக்கட்டை ஒரு நடுநிலையான நிலையில் வைத்திருக்கவும், மீடியன் நரம்பின் மீது தற்செயலாக அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும் உதவும்.
பணிச்சூழலுக்கு ஏற்ற மாற்றங்கள் (எர்கனாமிக் இன்ட்டர்வென்ஷன்ஸ்) – சரியான கணினி மவுஸைப் பயன்படுத்துவது அல்லது விசைப்பலகையின் (கீபோர்ட்) உயரத்தை அதிகரிப்பது போன்றவை, கணினியில் வேலை செய்யும்போது மணிக்கட்டை நடுநிலையான நிலையில் வைத்திருக்க உதவும். நாற்காலியின் உயரமும் பணிச்சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும், அப்போதுதான் முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் இருக்கும். உங்கள் மணிக்கட்டை கடினமான மேற்பரப்பில், குறிப்பாக மேசையின் கூர்மையான விளிம்பில் வைப்பதைத் தவிர்க்கவும்.
மருந்துகள் – மணிக்கட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க, மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். கார்டிகோஸ்டீராய்டுகள் என்பவை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஆகும், அவை பொதுவாக நரம்பில் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. அவை வீக்கத்தை விரைவாகக் குறைக்கவும் வலியைப் போக்கவும் உதவுகின்றன.
அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் பலனளிக்காது என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, கார்பல் டன்னல் சிண்ட்ரோமுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. கார்பல் டன்னலில் இன்னும் சற்று அதிக இடத்தை உருவாக்குவதற்காக, அறுவை சிகிச்சை நிபுணர் கார்பல் டன்னல் “ரிலீஸ்” என்ற அறுவை சிகிச்சையைச் செய்வார். இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய செயல்முறை தான், அதனால் பொதுவாக புறநோயாளி சிகிச்சையாகவே இது கருதப்படுகிறது.
உங்களுக்கு எந்த சிகிச்சைகள் சிறப்பாகப் பலனளிக்கும் என்பது உங்கள் கார்பல் டன்னலில் எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன மற்றும் கார்பல் டன்னல் சிண்ட்ரோமின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். பெரும்பாலானவர்களுக்கு பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் கார்பல் டன்னல் சிண்ட்ரோமைக் கட்டுக்குள் வைக்க முடியும், ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையே சிறந்த தேர்வாக அமைகிறது.
உங்கள் கையில் எப்போதாவது வலி, கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போகுதல் போன்றவை ஏற்பட்டால், முதலில் அதை நீங்கள் புறக்கணித்து விடக்கூடும்; ஆனால் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். கார்பல் டன்னல் சிண்ட்ரோமிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்றால், நீண்டகாலம் வலியற்ற நிம்மதியான வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து மகிழலாம்.