எண்டோகிரைன் கோளாறுகள் - வகைகள், காரணங்கள், அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வகைகள்

Jun 10, 2022

எண்டோகிரைனாலஜி என்பது, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான எண்டோகிரைன் அமைப்புடன் தொடர்புடைய மருத்துவத் துறை ஆகும். ஹார்மோன்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் பல சுரப்பிகள் மற்றும் திசுக்களை எண்டோகிரைனாலஜி ஆராய்கிறது.

மனித உடலில் 50-க்கும் மேற்பட்ட பலவித ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஹார்மோன்கள் நமது வளர்சிதை மாற்றம், சுவாசம், வளர்ச்சி, இனப்பெருக்கம், உணர்வுத்திறன் மற்றும் நடைச்செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இன்றுள்ள பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு ஹார்மோன் அளவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

முதலில் எண்டோகிரைன் அமைப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்

மனித எண்டோகிரைன் அமைப்பில் ஹார்மோன்களை வெளியிடும் பல சுரப்பிகள் உள்ளன, இந்த சுரப்பிகள் ஹார்மோன்களை உடலில் உள்ள பல்வேறு திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தில் அனுப்புகின்றன, அந்த திசுக்களின் செயல்பாடு பற்றிய தகவல்கள் அதில் உள்ளன. சுரப்பிகள் சரியான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதபோது, கோளாறுகள் உருவாகின்றன; இது வாழ்க்கையின் பல அம்சங்களை வெகுவாக பாதிக்கலாம்.

என்னென்ன வகையான எண்டோகிரைன் கோளாறுகள் உருவாகலாம்?

பின்வருபவை, எண்டோகிரைன் வல்லுநர்களால் பொதுவாக சிகிக்கையளிக்கப்படும் சில கோளாறுகள் ஆகும்:

  • நீரிழிவு நோய் (டயபடீஸ்)
  • கீல்வாத மூட்டுவலி (ஆஸ்டியோபோரோசிஸ்)
  • மாதவிடாய்
  • வளர்சிதை மாற்றக் கோளாறுகள்
  • தைராய்டு நோய்கள்
  • ஹார்மோன்களின் அதிகப்படியான அல்லது குறைவான உற்பத்தி
  • சில புற்றுநோய்கள்
  • குள்ளமாக இருக்கும் நிலை
  • கருத்தரிக்க இயலாத நிலை

எண்டோகிரைன் கோளாறுகள் உருவாக காரணம் என்ன?

எண்டோகிரைன் கோளாறுகள் பொதுவாக பின்வரும் காரணங்களால் ஏற்படுகின்றன:

  • ஹார்மோன் சமநிலையின்மை, அதாவது சுரப்பிகளில் இருந்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஹார்மோன் வெளியிடப்படும் நிலை. இரத்த ஓட்டத்தில் சுரக்கும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்தும் எண்டோகிரைன் பின்னூட்ட அமைப்பில் ஏற்படும் பிரச்சனையால் இவை ஏற்படுகின்றன.
  • எண்டோகிரைன் சுரப்பி நோய்
  • மரபணு கோளாறு
  • சுரப்பியில் தொற்று
  • சுரப்பியில் காயம்
  • சுரப்பிகளில் முடிச்சுகள் அல்லது கட்டிகளின் வளர்ச்சி. பெரும்பாலான கட்டிகள் ஆபத்தில்லாதவை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதில்லை. இருப்பினும், இவை சுரப்பிகளின் ஹார்மோன் உற்பத்தியில் குறிக்கிட வாய்ப்புள்ளது.

எண்டோகிரைன் கோளாறுகள் எவ்வளவு பரவலாக காணப்படுகிறது?

வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, உடல் பருமன், தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் போன்றவற்றின் காரணமாக உலக அளவில் எண்டோகிரைன் கோளாறுகள் அதிகரித்து வருவதற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறுகள் மிகவும் பொதுவான எண்டோகிரைன் கோளாறுகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்டோகிரைன் செயல்பாட்டிற்கு வயது எப்படி ஒரு காரணமாக அமைகிறது?

வயதாக ஆக எண்டோகிரைன் அமைப்பின் சரியான செயல்பாடு குறைகிறது. பல ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது, மேலும் இது அதன் உணர்திறனையும் குறைக்கிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் எல்லாருக்கும் பொதுவானதல்ல, தனிநபர்களுக்கு இடையே கணிசமாக வேறுபடும்.

இந்த மாற்றங்களில் சில,

  • ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைவதால் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது.
  • வளர்ச்சி ஹார்மோன் குறைவதால் தசையின் அளவும் அதன் வலிமையும் குறைகிறது.
  • மெலடோனின் அளவு குறைவதால் தூங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
  • சிலருக்கு இன்சுலின் உணர்திறன் குறைவதால் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
  • நுண்ணறை-தூண்டுதல் ஹார்மோன், லுடினைசிங் ஹார்மோன், நோர்பைன்ப்ரைன், எபிநெஃப்ரின் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன் போன்ற சில ஹார்மோன்கள் அதிகரிக்கலாம்.

எண்டோகிரைன் கோளாறுகள் யாருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?

பின்வரும் நிலை உள்ளவர்களுக்கு எண்டோகிரைன் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்:

  • உயர் இரத்த கொழுப்பு
  • குடும்பத்தில் முன்னோர்களுக்கு எண்டோகிரைன் சுரப்பிக் கோளாறுகள் இருப்பதான வரலாறு
  • துடிப்பான செயல்பாடில்லாத வாழ்க்கை முறை
  • உடல் பருமன்
  • ஆட்டோஇம்யூன் நோய்
  • கருத்தரித்த நிலை
  • சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அதிர்ச்சி, தொற்று அல்லது கடுமையான காயம் ஏற்பட்டவர்கள்
  • வயதானவர்கள்

எண்டோகிரைன் கோளாறுகள் குழந்தைகளை பாதிக்குமா?

ஆம், எண்டோகிரைன் கோளாறுகள் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

பின்வருபவை குழந்தைகளிடையே மிகவும் பொதுவாக காணப்படும் எண்டோகிரைன் கோளாறுகள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது:

  • தைராய்டு செயலிழப்புகள்: கருப்பையில் தொடங்கி குழந்தையின் 2 வயது வரை, இயல்பான மூளை வளர்ச்சியில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • நீரிழிவு நோய்: இன்சுலின் உற்பத்தி, இன்சுலின் செயல்பாடு ஆகியவற்றில் கோளாறு ஏற்படுவதன் விளைவாக ஏற்படும் உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் நீரிழிவு நோய் ஏற்படலாம். உணவுப் பழக்கவழக்கங்களும், துடிப்பான செயல்பாடில்லாத  வாழ்க்கைமுறையும் குழந்தைகளிடையே நீரிழிவு நோய் அதிகரிக்க காரணமாகிறது.
  • உடல் பருமன்: WHO 2010 அறிக்கைகளின்படி, உலகம் முழுவதிலும் 5 வயதுக்கு கீழ் உள்ள சுமார் 43 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.
  • முன்கூட்டிய பருவமடைதல்: இது, பெண் குழந்தைகள் 8 வயதுக்கு முன்பாகவும், ஆண் குழந்தைகள் 9 வயதுக்கு முன்பாகவும் பருவமடைவதை குறிக்கும். காலத்துக்கு முன்பாக பருவமடைதல், விரைவான வளர்ச்சி மற்றும் எலும்பு முதிர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது, இது தவறான எலும்பு வளர்ச்சி மற்றும் குன்றிய வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
  • எண்டோகிரைன் புற்றுநோய்: இது பொதுவாக கணையம் (பான்கிரியாஸ்) மற்றும் தைராய்டு புற்றுநோய்களை குறிக்கிறது.

Also Read: The Functions of The Thyroid Gland


எண்டோகிரைன் கோளாறுகள் ஏற்படாமல் நாம் எப்படி தடுத்துக் கொள்ளலாம்?

சில எண்டோகிரைன் கோளாறுகள் பரம்பரையாக மற்றும் அறியப்படாத சில காரணங்களால் ஏற்படுகின்றன. இருப்பினும், சில கோளாறுகள் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் மற்றும் PCOS போன்றவை இதில் அடங்கும், இந்த நிலைமைகள் ஏற்படும் ஆபத்தை நாம் குறைக்கலாம்.

1. ஆரோக்கியமான சரிவிகித உணவு உண்ணுதல்

  • உணவில் சராசரியாக 20-30 கிராம் புரதம் சேர்க்கவும். போதுமான புரதம் உட்கொள்வது எண்டோகிரைன் செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.
  • அதிக நார்ச்சத்துள்ள உணவு உட்கொள்வதால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது மற்றும் பசி உணர்வு குறைகிறது
  • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை அதிக அளவில் உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுவதுடன் நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்தும் உள்ளது.
  • டிரான்ஸ்-கொழுப்பைத் தவிர்த்து, ஆரோக்கியமான கொழுப்புகளான PUFA மற்றும் MUFA மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • க்ரீன் டீ அருந்துவதால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கான அபாயம் குறைகிறது.
  • ஒரே நேரத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும், அதனால் சிறந்த ஆரோக்கியத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 1200 கலோரிகளை சரியான அளவில், சரியான இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.

2. தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுதல்

  • உடல் எடையைத் தாங்கும் பயிற்சிகள், ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி போன்றவை தசைப் பெருக்கத்தை பராமரிப்பதன் மூலமும், உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதன் மூலமும் ஹார்மோன் நோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

3. புகைபிடிப்பதை நிறுத்துதல்

4. மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்

5. மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் போதுமான அளவு தூக்கம் கொள்ளுதல்

  • தியானம், யோகா மற்றும் இசை கேட்பது ஆகியவை மன அழுத்த ஹார்மோன் அளவை இயல்பாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால் மன அழுத்த ஹார்மோன் மற்றும் பசி மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் குறைகின்றன.

6. ஆரோக்கியமான முறையில் வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரித்தல்

7. குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல்


Also read: Yoga And Stress Relief


எண்டோகிரைன் கோளாறுகள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எண்டோகிரைன் சுரப்பிக் கோளாறுகள் ஒரு எண்டோகிரைன் நிபுணர் எனப்படும் சிறப்பு மருத்துவரால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அறிகுறிகள், உடல் பரிசோதனை, மருத்துவ வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எண்டோகிரைன் நிபுணர்கள் நோய் கண்டறிகின்றனர்.

நோயறிதலில் பின்வரும் சோதனைகள் அடங்கும்:

  • இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவை தீர்மானித்தல்.
  • கட்டி இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும் CT ஸ்கேன், அல்ட்ராசோனோகிராபி, MRI, PET ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள்.

எண்டோகிரைன் கோளாறுகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
எண்டோகிரைன் கோளாறுகளுக்கு பொதுவாக பின்வரும் வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது:

  • சுரப்பி குறைந்த அளவில் ஹார்மோன்களை வெளியிட்டாலோ அல்லது உற்பத்தியே செய்யவில்லை என்றாலோ, ஹார்மோன் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
  • ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் மருந்துகள்.
  • கட்டி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு (ரேடியேஷன்) சிகிச்சை.

புதிதாக நோய் கண்டறியப்படுவது மிகவும் சங்கடமான, கவலை தரும் விஷயம் தான். இருப்பினும் உங்களுக்கு உதவ எண்டோகிரைன் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள், உங்களுக்கு உதவக்கூடிய மருந்துகள், நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சமீபத்திய அறிவைக் கொண்டவர்கள். அவர்களின் உதவியுடன் உங்கள் மருத்துவ நிலையை நீங்கள் நன்கு நிர்வகித்துக் கொண்டு, அல்லது அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக வாழலாம். 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved