வைட்டமின் டி குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வழிகள்

May 08, 2023

வைட்டமின் டி குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வழிகள்நீங்கள் சூரிய ஒளியைத் தவிர்த்தால், பால் ஒவ்வாமையால் அவதிப்பட்டால் அல்லது வீகன் (தீவிர  சைவ) உணவுமுறையைக் கடைப்பிடித்தால், நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டிற்கு ஆளாக நேரிடலாம்.

சூரிய ஒளிக்கு நாம் நம் சருமத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, நமது உடல் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்வதால், இது சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள்

வைட்டமின் டி குறைபாட்டினால் பின்வருபவை ஏற்படலாம்:

 • எலும்பு வலி மற்றும் தசை பலவீனம்
 • கார்டியோவாஸ்குலர் நோயால் இறப்பு ஏற்படுவதற்கான அதிக ஆபத்து
 • வயதானவர்களில், அறிவாற்றல் குறைபாடு
 • குழந்தைகளில், கடுமையான ஆஸ்துமா
 • புற்றுநோய்

சில சமயம் வைட்டமின் டி குறைபாடுள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை.

வைட்டமின் டி குறைபாட்டிற்கான காரணங்கள்

வைட்டமின் டி குறைபாடு பல காரணங்களினால் ஏற்படலாம்:

 • வைட்டமின் டி-யின் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் உட்கொள்ளாததால்.

நீங்கள் வீகன் உணவுமுறையை பின்பற்றி, அசைவ உணவுகளை தவிர்த்தால் இது ஏற்படலாம், ஏனென்றால் பெரும்பாலான வைட்டமின்-டி இயற்கை ஆதாரங்கள் விலங்கு-சார்ந்தவை, உதாரணமாக மீன் மற்றும் மீன் எண்ணெய்கள், முட்டையின் மஞ்சள் கருக்கள், செறிவூட்டப்பட்ட பால் மற்றும் மாட்டிறைச்சியின் கல்லீரல் போன்றவை.

 • சூரிய ஒளிக்கான உங்கள் வெளிப்பாடு குறைவாக இருந்தால்.

உங்கள் சருமத்தின் மீது சூரிய ஒளி படும் போது உடல் வைட்டமின் டி-ஐ உருவாக்குகிறது என்பதால், நீங்கள் போதுமான அளவு வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

 1. குளிர்காலத்தில், சூரிய ஒளி குறைவாக இருப்பதால் வைட்டமின் டி குறைபாடு அதிகமாக இருக்கலாம்.
 2. உலகின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு - உதாரணமாக, வட கனடா மற்றும் அலாஸ்கா போன்ற இடங்கள் - சூரியனின் UVB கதிர்கள், குறிப்பாக குளிர்காலத்தில், குறைவாக கிடைக்கலாம்.
 3. வெப்பமான காலநிலை உள்ள நாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும், ஏனெனில் வெப்பத்தைத் தவிர்க்க அவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருக்க விரும்பலாம்.
 4. அதிக மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க விரும்பலாம். மேலும் காற்றில் உள்ள மாசுத்துகள்கள் UVB கதிர்களைத் தடுப்பதால், அக்கதிர்கள் தோல் மீது படியாமல் போகலாம்.
 5. மதரீதியான காரணங்களுக்காக, உங்கள் உடலையும் தலையையும் மறைக்கும் ஆடைகளை நீங்கள் அணிந்தால், சூரிய ஒளிக்கான உங்கள் வெளிப்பாடு குறையும்.
 6. உங்கள் தொழில் காரணமாக நீங்கள் சூரிய ஒளிக்கு உங்களை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் போகலாம், உதாரணமாக ஏசி அலுவலகங்களில் பணிபுரிவது.
 • உங்களுக்கு கருமையான சருமம் இருந்தால். உங்கள் தோலில் உள்ள மெலனின் என்ற நிறமி, சூரிய ஒளியின் வெளிப்பாட்டிற்கு உட்படும் சருமத்தின் வைட்டமின் டி-ஐ உருவாக்கும் திறனைக் குறைக்கிறது.
 • உங்கள் சிறுநீரகங்களால் வைட்டமின் டி-ஐ பயனுள்ள வடிவத்திற்கு மாற்ற முடியவில்லை. வயதாக ஆக, ​வைட்டமின் டி-யை பயனுள்ள வடிவத்திற்கு மாற்றும் நமது சிறுநீரகங்களின் திறன் குறைகிறது, இதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
 • உங்கள் செரிமானப் பாதை வைட்டமின் டியை போதுமான அளவு உறிஞ்சாத போது. கிரோன் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் செலியாக் நோய் உள்ளிட்ட சில மருத்துவப் பிரச்சனைகள் காரணமாக, நீங்கள் உண்ணும் உணவில் இருந்து வைட்டமின் டியை உறிஞ்சும் உங்கள் குடலின் திறனை அது பாதிக்கலாம்.
 • புகை பிடித்தல்: புகைப்பிடிப்பவர்களிடையேவைட்டமின் டி குறைபாட்டின் அளவுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. உடலில் வைட்டமின் டி-3 உற்பத்தியை செயல்படுத்தும் மரபணுவை புகைபிடித்தல் பாதிக்கலாம் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 • நீங்கள் பருமனாக இருப்பதால். கொழுப்பு செல்கள் மூலம் வைட்டமின் டி உங்கள் இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சுழற்சியில் அது வெளியிடப்படுவதை மாற்றுகிறது. உடல் நிறை குறியீட்டெண் (BMI) 30 அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாகவே உள்ளது.
 • தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள்: தாய்ப்பாலில் வைட்டமின் டி குறைவாக உள்ளது, அதனால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பிறந்த சில நாட்களில் இருந்து ஒவ்வொரு நாளும் 1 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட ஃபார்முலா பாலை உட்கொள்ளும் வரை, தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் டி சப்ளிமெண்ட் வழங்குமாறு மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் டி குறைபாட்டிற்கான சோதனைகள்

25-ஹைட்ராக்ஸி வைட்டமின் டி இரத்தப் பரிசோதனையானது உங்கள் உடலில் வைட்டமின் டி எவ்வளவு உள்ளது என்பதை அளவிடுவதற்கான மிகச் சரியான சோதனையாகும்.

20 என்ஜி/மிலி (நானோகிராம்/மில்லிலிட்டர்) முதல் 50 என்ஜி/மிலி வரை ஆரோக்கியமான அளவாகக் கருதப்படுகிறது. 12 என்ஜி/மிலி-க்கும் குறைவான அளவு வைட்டமின் டி குறைபாட்டைக் குறிக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டிற்கான சிகிச்சை

வைட்டமின் டி உள்ள உணவுகளை அதிகமாக உண்பதும் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் இந்த வைட்டமினை பெறுவதும், மற்றும் சூரிய ஒளி வெளிப்பாட்டின் மூலம் பெறுவதுமே இந்த குறைபாட்டிற்கான சிகிச்சையாகும்.

நீங்கள் அதிக நேரம் வெயிலில் போகாமல் இருந்தாலோ அல்லது எப்போதும் உங்கள் சருமத்தை மறைப்பதில் கவனமாக இருந்தாலோ (சன்ஸ்கிரீன் வைட்டமின் டி உற்பத்தியைத் தடுக்கிறது), வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுப்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.

வைட்டமின்-டி குறைபாட்டைத் தடுப்பதற்கான சிறந்த வழிகள்

வைட்டமின் டி உள்ள உணவுகள் 

வைட்டமின் டி-க்கான நல்ல உணவு ஆதாரங்கள் பின்வருமாறு:

 • மேக்கரெல் அல்லது சால்மன் போன்ற எண்ணெய் மீன்கள்
 • மாட்டிறைச்சி கல்லீரல்
 • சீஸ்
 • காளான்கள்
 • முட்டையின் மஞ்சள் கரு
 • சில காலை உணவு சீரியல்கள், ஆரஞ்சு சாறு, பால், சோயா பானங்கள் மற்றும் வெண்ணெ போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகள்

வைட்டமின் டி குறைபாட்டைத் தடுப்பதற்கான சிறந்த வழிகள், இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் மற்றும் ஒவ்வொரு நாளும் வெளியில் சிறிது நேரம் செலவிடுவதும் ஆகும். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான வைட்டமின் டியை உணவு மற்றும் சூரிய ஒளியில் இருந்து சுலபமாக பெறலாம்.

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாட்டை உருவாக்குவதற்கான ஆபத்து காரணிகள் உங்களுக்கு இருந்தாலோ அல்லது அதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினாலோ, உங்கள் வைட்டமின் டி அளவை தெரிந்து கொள்வதற்கான இரத்த பரிசோதனை செய்து கொள்ள உங்கள் மருத்துவரை அணுகவும்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © NMC Pondy. All Rights Reserved