மனநல நோய்கள் குணப்படுத்தப் படக் கூடியவை, கவலை வேண்டாம்!

Sep 21, 2023

மனநோய்க்கான அறிகுறிகள்

நமது உணர்ச்சி, சிந்தனை அல்லது செயல்பாடு (அல்லது இவற்றின் கலவை) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை நாம் “மனநல நோய்கள்” என்கிறோம். இந்த மாற்றங்கள் சமூகம், வேலை அல்லது குடும்பத்தில் ஏற்படும் துன்பம் மற்றும்/அல்லது பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பெரும்பாலான சமயங்களில், மனநல நோய்களைச் சுற்றி நியாயமற்ற களங்கம் நிலவுவதால், அதற்கான உதவி மற்றும் ஆதரவைப் பெற மக்கள் தயங்குகிறார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் பயப்படுவதால் சிகிச்சையை நாடுவதில்லை. அதனால் அவர்களின் நிலை மோசமாவதுடன், சில நேரங்களில் வேறு வழி தெரியாமல் தங்கள் உயிரைக் கூட அவர்கள் மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.

தங்களின் மனநோயைப் பற்றிப் பேசுவதற்கும், அதற்கு தகுந்த சிகிச்சையைப் பெறுவதற்கும் மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் சுகாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்தக் களங்கத்தைப் போக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவரோ மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் இதோ:

  • சோகமாக அல்லது மனச்சோர்வாக இருப்பதாக உணர்தல்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • தீவிரமான உணர்வுகள் (பயம், குற்ற உணர்வு, சோகம் அல்லது கோபம் உட்பட)
  • நண்பர்களைச் சந்தித்தல் அல்லது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து விலகுதல்
  • தீவிர மனநிலை மாற்றங்கள்
  • மது அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம்
  • விவரிக்க முடியாத கோபம் அல்லது வன்முறை செயல்பாடு
  • மன அழுத்தம் அல்லது உணர்வுகளைச் சமாளிக்க இயலாமை
  • சித்தப்பிரமை அல்லது பிரமைகள் (குரல்களைக் கேட்பது போன்றவை)
  • தன்னைத் தானேயோ அல்லது பிறரையோ காயப்படுத்த நினைப்பது

மனநல நோய்களுக்கான பல வகையான சிகிச்சைகளை நவீன மருத்துவம் நமக்கு வழங்குகிறது, அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்:

உளவியல் சிகிச்சை அல்லது ஆலோசனை:

இது “பேச்சு சிகிச்சை (டாக் தெரபி)” என்றும் அறியப்படுகிறது. மனநோய்களுக்கான பொதுவான சிகிச்சைகளில் இதுவும் ஒன்று. ஒரு மனநல நிபுணர் உங்கள் மனநோயைப் பற்றி உங்களுடன் பேசுவார், அது மட்டுமல்லாமல், மன நலம் பற்றிய தகவல்கள், உங்கள் இறுக்கத்தைப் போக்கும் பயிற்சிகள், உங்கள் மனநல நிலையைச் சமாளிக்கும் திறன்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றைப் பற்றியும் அவர் உங்களுடன் பேசுவார். பேச்சு சிகிச்சையில் பல வகைகள் உள்ளன - அறிவாற்றல் சிகிச்சை (cognitive behavioral therapy) அல்லது இயங்கியல் சிகிச்சை (dialectical behaviour) ஆகியவை இதில் அடங்கும். பேச்சு சிகிச்சை பெரும்பாலும் மருத்துவர் மற்றும் நோயாளி ஆகியோருக்கிடையே தனிப்பட்ட முறையில் நடைபெறும், ஆனாலும் இது ஒரு குழு அமைப்பில் அல்லது உங்கள் குடும்பத்துடன் கூட செய்யப்படலாம். மனநோய் இல்லாதவர்களுக்கும் கூட, சவாலான வாழ்க்கைச் சூழ்நிலைகளை (துக்கம், விவாகரத்து போன்றவை) கடந்து செல்ல இந்த வகைச் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.


தொடர்புடைய வலைப்பதிவு: Mental Health - 10 Myths Debunked


பரிந்துரைக்கப்பட்ட மருந்து

மனநோய்களுக்கான மருந்துகள், உணர்ச்சிகள் மற்றும் சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் மூளை இரசாயனங்களில் மாற்றங்களைச் செய்கின்றன. இந்த மருந்துகள் மனநோய்களை குணப்படுத்தாது, ஆனால் அவை உங்கள் அறிகுறிகளை மேம்படுத்த உதவும், அத்துடன் ஆலோசனை போன்ற பிற சிகிச்சை முறைகளுடன் இணைந்து வழங்கப்படும் போது சிறப்பான பலன்கள் அளிக்கும். உங்களுக்கான மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்து, ஏதேனும் பக்க விளைவுகள் குறித்தும் ஆலோசனை கூறுவார்.

ஆதரவுக் குழுக்கள்

சுய உதவி மற்றும் ஆதரவுக் குழுக்கள் உங்கள் மருத்துவ நிலையைப் பற்றிய நுண்ணறிவைப் பெற உதவும். இந்தக் குழுக்கள் மூலம் உங்களுக்கு புதிய நண்பர்கள், உங்கள் நிலைக்கான ஆதரவு, ஆதாரங்கள் மற்றும் வாழ்க்கைக்கான உதவிக் குறிப்புகள் கிடைக்கலாம். மனநல நோய்களினால் ஏற்படும் தனிமை உணர்வுகளைக் கையாளவும் இவை உதவுகின்றன.

மற்ற சிகிச்சைகள்

மனநல நோய்களுக்கு, உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற வேறு பல வகையான சிகிச்சைகளும் உதவும். உங்கள் உணர்வுகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தும் வழிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் கலை ஆக்கப்பூர்வமான சிகிச்சைகளும் (க்ரீயேடிவ் தெரபி) இதில் அடங்கும் – உதாரணமாக, வரைதல் (ஆர்ட் தெரபி), இசை (மியூசிக் தெரபி), இயக்கப்பயிற்சி (மூவ்மென்ட் தெரபி) அல்லது எழுதுதல் (ரைட்டிங் தெரபி) ஆகியவை.

ECT அல்லது பிற மூளை தூண்டுதல் சிகிச்சை

எலக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT) என்பது மூளைக்குள் மின்சாரத்தை அனுப்பும் ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும். இது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தி, உங்கள் அறிகுறிகளை மேம்படுத்தலாம் அல்லது மாற்றியமைக்கவும் செய்யலாம். பெரும்பாலும், மற்ற வகையான சிகிச்சைகள் பலனளிக்காத போது ECT மற்றும் பிற மூளை தூண்டுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கண் இயக்க தேய்மானம் மற்றும் மறு செயலாக்க (EMDR) சிகிச்சை 

இந்த வகையான சிகிச்சை மன அழுத்தத்தைப் போக்கப் பயன்படுகிறது. அதிர்ச்சி, குறிப்பாக பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) சிகிச்சைக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

மருத்துவமனை அல்லது உள்நோயாளி சிகிச்சைத் திட்டம்

உங்கள் மனநல நோய் மிகவும் மோசமாகும் பட்சத்தில், நீங்கள் மருத்துவமனையில் தங்கியோ அல்லது நீண்டகால சிகிச்சைத் திட்டத்தில் பங்கெடுத்தோ சிகிச்சை பெற வேண்டியிருக்கும். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாத நிலையிலோ அல்லது உங்களால் உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கு ஏற்படும் அபாயம் இருக்கும் போதோ, இந்த சிகிச்சை உதவலாம்.

எல்லா சிகிச்சைகளும் எல்லோருக்கும் பலனளிக்காது, அத்துடன் எல்லோரும் எல்லா சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு ஒரு வகையான சிகிச்சை பலனளிக்கலாம், வேறு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளின் கலவை பலனளிக்கலாம். உங்களுக்கான தகுந்த சிகிச்சையை உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.

மனநல நோய் இருப்பது குறித்து வெட்கப்படவோ அல்லது வருத்தப்படவோ வேண்டிய அவசியமில்லை, அதனால் அதற்கான உதவியை நாடத் தயங்க வேண்டாம், ஏனெனில் இப்போது பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மனநோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதும் அதைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியம் ஏனெனில் அது உங்கள் நிலையை சமாளிக்க உங்களுக்கு உதவலாம், உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் உதவலாம், அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றவும் இது உதவக்கூடும்!
 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © NMC Pondy. All Rights Reserved