மூட்டு மாற்று சிகிச்சை

Jun 19, 2023

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை - ஆர்த்ரோபிளாஸ்டி  ஆர்த்ரோபிளாஸ்டி” என்றும் அழைக்கப்படும் மூட்டு மாற்று சிகிச்சை என்பது, அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த மூட்டுக்கு பதிலாக ஒரு செயற்கைப் பொருளாலான (உலோகம், பீங்கான் அல்லது பிளாஸ்டிக்) மூட்டு பொருத்துவதாகும். பொதுவாக மூட்டு முழுவதுமாக மாற்றப்படும் (மொத்த மூட்டு மாற்று), ஆனாலும் சில நேரங்களில் சேதமடைந்த மூட்டு பகுதி மட்டுமே மாற்றப்படும் (பகுதி மூட்டு மாற்று).

மூட்டு மாற்று சிகிச்சை யாருக்கு தேவைப்படும்? 

பின்வரும் சூழல்களில் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்ளும்படி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கலாம்:

  • ஃப்சியோதெரபி, மருந்துகள், பிரேசிங், ஊசிகள், நடைப்பயிற்சி உதவி சாதனங்கள் மற்றும் ஓய்வு ஆகியவற்றினால் குணமடையாத மூட்டு வலி.
  • மூட்டு விறைப்பு இருப்பதாலும், அங்குமிங்கும் நடக்க முடியாததாலும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருத்தல்.
  • மருந்துகளினாலோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களாலோ குணமடையாத வீக்கம்.

என்னென்ன மூட்டு மாற்று சிகிச்சைகள் உள்ளன?

மிகவும் பொதுவாக செய்யப்படும் மூட்டு மாற்று சிகிச்சைகள் இடுப்பு, முழங்கால் மற்றும் தோள்பட்டையில் செய்யப்படுபவை ஆகும். 

மாற்று சிகிச்சை செய்யக்கூடிய மற்ற மூட்டுகள்:

  • கணுக்கால்
  • முழங்கைகள்
  • கால்விரல்கள்
  • மணிக்கட்டுகள்

மூட்டு மாற்று சிகிச்சைக்கு நீங்கள் எப்படி உங்களை தயார் செய்து கொள்ளலாம்? 

இந்தச் செயல்முறைக்கு நீங்கள் தயார் செய்து கொள்ள உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார். அறுவைசிகிச்சை செய்து கொள்ள தேவையான உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் இருக்க வேண்டுமென்பதால், அதற்கு முந்தைய வாரங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஃபிசியோதெரபி, உடற்பயிற்சி அல்லது உணவுத் திட்டத்தை அவர்கள் பரிந்துரைக்கலாம்.

அறுவைச் சிகிச்சைக்கு முன், உங்களுக்கு இரத்தப் பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் மார்பு எக்ஸ்ரே போன்ற சில சோதனைகள் செய்யப்படலாம். 
உங்கள் உடல் நல வரலாற்றைப் பற்றியும், நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய மருந்துகள் பற்றியும் உங்கள் மருத்துவர் கேட்பார். அறுவைசிகிச்சைக்கு முன் நீங்கள் சில மருந்துகளை (பிளட் தின்னர் போன்றவை) நிறுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் செயல்முறைக்கு முந்தைய இரவில் நீங்கள் எப்போது சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்றும் உங்கள் மருத்துவர் கூறுவார்.

மாற்று அறுவை சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைஅறுவை சிகிச்சையின் வகை, மற்றும் நீங்கள் எந்த மூட்டு மாற்றம் செய்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் அறுவை சிகிச்சை முறையை மருத்துவர் முடிவு செய்வார். உங்கள் செயல்முறைக்கு முன்பு, உங்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக, உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.

உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் கீறல்கள் (வெட்டுகள்) செய்து சேதமடைந்த மூட்டை நீக்குவார். அதற்கு மாற்றாக ஒரு செயற்கை மூட்டு பொருத்துவார். வெட்டுக்களை மூடுவதற்கு அவர் தையல்கள், ஸ்டேபிள்ஸ் அல்லது அறுவை சிகிச்சை பசையை பயன்படுத்துவார். மூட்டை ஒரு பேண்டேஜ் போட்டு மூடுவார். உங்களுக்கு பிரேஸ் அல்லது ஸ்லிங் கூட தேவைப்படலாம்.

குறைந்தபட்ச இன்வேஸிவ் முறைகளைப் பயன்படுத்தியும் சில சமயம் மூட்டு மாற்று செயல்முறைகளைச் செய்யப்படலாம், அதற்குக் வெட்டுக்களும் சிறப்பு கருவிகளும் குறைவாகவே தேவைப்படும். 

அறுவைச் சிகிச்சைக்கு பிறகு என்ன ஆகும்?

உங்கள் செயல்முறையின் வகையைப் பொறுத்து, அறுவை சிகிச்சை செய்த அன்றே நீங்கள் வீட்டிற்கு திரும்பச் செல்லலாம் அல்லது ஒன்றிரண்டு நாட்களுக்கு நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கலாம். 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறிதளவு வலி இருப்பதாக நீங்கள் உணரலாம். செயல்முறைக்குப் பிறகான முதல் சில நாட்களில், நீங்கள் கண்டிப்பாக இவற்றைச் செய்ய வேண்டும்:

  • உடல்ரீதியான செயல்பாடுகளைத் தவிர்க்கவும் 
  • பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் ஃபிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை பின்பற்றவும். உங்கள் மருத்துவர் கூறும் மற்ற வழிமுறைகளையும் பின்பற்றுவது முக்கியம். 
  • அறுவை சிகிச்சையின் போது செய்யப்பட்ட வெட்டுக்களை சுத்தமாகவும் மூடியபடியும் வைக்கவும் 
  • வலி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் 

மூட்டு அறுவை சிகிச்சையினால் என்ன நன்மைகள் ஏற்படும்?

மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்வதனால் வலி மற்றும் விறைப்பு இல்லாமல் நடக்க உதவும். மூட்டு மாற்றத்திற்குப் பிறகு, தாங்கள் முன்பு அனுபவித்து மகிழ்ந்த செயல்களில் தாராளமாக ஈடுபடலாம். மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற இந்த அறுவை சிகிச்சைகள் உதவுவதால், இதன் மூலம் வாழ்க்கைத் தரத்திலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மூட்டு மாற்று சிகிச்சையிலுள்ள அபாயங்கள் அல்லது சிக்கல்கள் என்ன?

எந்தவொரு அறுவை சிகிச்சையையும் போலவே, இதிலும் சிக்கல்களுக்கான ஆபத்து உள்ளது. சில ஆபத்துக்கள்:

  • இரத்தக்கட்டுகள்
  • தொற்று
  • மாற்றப்பட்ட மூட்டைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கு காயம் அல்லது சேதம்
  • மூட்டு விறைப்பு, பலவீனம் அல்லது உறுதியற்ற தன்மையினால் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு
  • இடப்பெயர்வு உட்பட புதிய மூட்டு பிரச்சினைகள்
  • உங்களுக்கு நீரிழிவு, ஹீமோபிலியா அல்லது லூபஸ் போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருக்கலாம்.

மூட்டு மாற்று சிகிச்சைக்குப் பிறகு எனது வழக்கமான செயல்பாடுகளுக்கு நான் எப்போது திரும்ப முடியும்?

மூட்டு மாற்ற சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைவது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். நீங்கள் குணமடைவது பின்வரும் காரணிகளைப் பொறுத்து அமையலாம்:

  • செயல்பாட்டு நிலை மற்றும் வாழ்க்கைமுறை
  • வயது
  • மூட்டு மாற்ற வகை
  • இதர உடல்நிலை
  • உங்களுக்கு செய்யப்பட்டது மொத்த மூட்டு மாற்றா அல்லது பகுதி மூட்டு மாற்றா என்பதைப் பொறுத்து

பெரும்பாலான மக்கள் ஃபிசியோதெரபியினால் விரைவில் குணம் அடைகிறார்கள், ஏனெனில் இது மாற்றப்பட்ட மூட்டைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது, அத்துடன் மூட்டுக்கும் சிறந்த ஆதரவை அளிக்கிறது. 

மாற்றப்பட்ட புதிய மூட்டு எவ்வளவு காலம் நீடிக்கும்?

மாற்றப்பட்ட புதிய மூட்டு பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றாலும், இதுவும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். உங்கள் புதிய மூட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு தேய்ந்துவிட்டால், மற்றொரு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அதைத் திருத்த முடியும்.


தொடர்புடைய வலைப்பதிவு:  கீல்வாத மூட்டுவலி என்பது என்ன?


மூட்டு மாற்று சிகிச்சைக்குப் பிறகு எனது மருத்துவரை நான் எப்போது பார்க்க வேண்டும்?

செயல்முறைக்குப் பிறகு, இவை ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை உடனடியாக அழைக்க வேண்டும்:

  • இரத்தப்போக்கு.
  • காய்ச்சல், கடுமையான வீக்கம் அல்லது கீறல்களில் இருந்து வடிகால் (சீழ்) உட்பட நோய்த்தொற்றின் அறிகுறிகள்.
  • வலி நிவாரண மருந்துகளால் நீங்காத கடுமையான வலி.

மூட்டுவலி மற்றும் விறைப்பான மூட்டு உள்ளவர்கள் தங்கள் வழக்கமான செயல்களுக்குத் திரும்ப, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உதவும். மூட்டு மாற்றத்திற்குப் பிறகு பலர் மீண்டும் தங்கள் வழக்கமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் குணமடைதல் வித்தியாசமாக இருக்கும், அத்துடன் உங்கள் புதிய மூட்டைப் பாதுகாக்க உங்கள் செயல்பாடுகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவருடன் முன்கூட்டியே வெளிப்படையாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது முக்கியம். சிறந்த முறையில் குணமடைய ஒரு ஃபிசியோதெரபி திட்டத்தை பின்பற்றி, மருத்துவரின் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.
 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved