ஆஸ்துமாவுடன் வாழ்வது – நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Jan 24, 2024

ஆஸ்துமா என்றால் என்ன?ஆஸ்துமா என்றால் என்ன? 

ஆஸ்துமா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நாட்பட்ட நோய். இதன் விளைவாக சுவாசப்பாதைகள் குறுகலாம், வீங்கலாம், அதிகப்படியான சளி அடைப்பு ஏற்படலாம் மற்றும் அதைச் சுற்றி தசை இறுக்கம் ஏற்படலாம்; இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

உலக அளவில் ஆஸ்துமா 262 மில்லியன் மக்களை பாதிக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் அறிகுறிகளை நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆஸ்துமாவின் அறிகுறிகள் காலப்போக்கில் மாறக்கூடும், அதனால் நாம் அறிகுறிகளை முறையாக கவனித்து, மருத்துவரிடம் தெரிவித்து, தேவைக்கேற்ப சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்.
 

ஆஸ்துமாவின் அறிகுறிகள்

அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு குறிப்பாக சில நேரங்களில் மட்டுமே அறிகுறிகள் தோன்றும் – உதாரணமாக, உடற்பயிற்சி செய்யும் போது அல்லது மாசு-நிறைந்த காற்றுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் போது.

ஆஸ்துமாவின் பொதுவான சில அறிகுறிகள் பின்வருமாறு:

 • மூச்சுத்திணறல்
 • மார்பு இறுக்கம்
 • மார்பு வலி
 • மூச்சை வெளியிடும் போது மூச்சுத்திணறல் ஏற்படுதல் - இது பொதுவாக குழந்தைகளிடம் காணப்படும்.
 • மூச்சுத்திணறல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தூங்குவதில் சிரமம்

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். உங்களுக்கு வேகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டாலோ அல்லது இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகும் நிவாரணம் கிடைக்காமல் போனாலோ, அதை அவசர நிலையாக கருதி உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.

ஆஸ்துமா ஏற்படக் காரணம்

ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்பட குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் இல்லை; இது பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றின் கலவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


ஆஸ்துமாவின் பல்வேறு வகைகள்:

 • ஒவ்வாமை ஆஸ்துமா - தூசி, மகரந்தம், பூஞ்சை மற்றும் காற்றில் உள்ள பிற துகள்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
 • உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா - உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பின் காரணமாக ஏற்படுவது.
 • ஸ்டீராய்டு-எதிர்ப்பு ஆஸ்துமா – கார்டிகோஸ்டீராய்டுகள் கொண்டு வழங்கப்படும் சிகிச்சைக்கு பலனளிக்காது
 • தொழில்சார் ஆஸ்துமா - இரசாயனப் புகைகள், வாயுக்கள், தூசி போன்ற பணியிட காரணிகளால் ஏற்படுகிறது.
 • இரவுநேர ஆஸ்துமா - முக்கியமாக இரவில், தூங்கச் செல்லும் போது ஏற்படுகிறது.
 • ஆஸ்பிரினால்-தூண்டப்படும் ஆஸ்துமா - ஆஸ்பிரின் உட்கொள்ளும் போது, ஆஸ்பிரின்-சகிப்பின்மையால் ஏற்படலாம்.

ஆஸ்துமாவிற்கான சிகிச்சைகள்

உங்களுக்கு எந்த வகையான ஆஸ்துமா ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். உடல் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு சோதனைகள், இமேஜிங் சோதனைகள் மற்றும் ஒவ்வாமை சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் உங்கள் ஆஸ்துமாவின் காரணத்தை முறையாக கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சை முறையை பரிந்துரைப்பார்.

ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகித்தல்

நமது உடலின் எந்தப் பகுதியும் தனித்து இயங்குவதில்லை; அதைப் போலவே நமது நுரையீரலும் உடலின் மற்ற எல்லாப் பகுதிகளுடனும் இணைந்து செயல்படுகிறது. ஆகவே சில மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவை கொண்ட ஒரு முழுமையான சிகிச்சை முறையினால் மட்டுமே உங்கள் ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க முடியும். அத்துடன் நீங்கள் சௌகரியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். 

உங்கள் ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் / வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதோ:

 • போதுமான அளவு, நல்ல தரமான தூக்கம் தேவை – நல்ல தூக்கம் ஆஸ்துமாவுக்கு மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம். போதுமான அளவு தூக்கம் இருந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் நன்கு செயல்படும். பெரியவர்களுக்கு இரவில் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். நீங்கள் தூங்கும் போது அதிகமாக குறட்டை விட்டாலோ அல்லது காலையில் எழுந்திருக்கும் போது களைப்பாக உணர்ந்தாலோ, உங்களுக்கு “ஸ்லீப் அப்னியா” (தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்) உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பாக ஃபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஐபாட்கள் உபயோகிப்பதை நிறுத்தவும், ஏனென்றால் அவை உமிழும் நீல ஒளி நல்ல தூக்கத்தில் குறுக்கிடலாம்.
 • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் - இது முரணாகத் தோன்றலாம் ஆனால் உங்கள் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி போன்ற குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சியுடன் மெதுவாகத் தொடங்கலாம்; பின்னர் உடற்பயிற்சியின் தீவிரத்தையும் கால அளவையும் அதிகரிக்கலாம். உங்கள் உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க உங்கள் மருத்துவரின் அனுமதி பெறுவது முக்கியம். உடற்பயிற்சி நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும், சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், நுரையீரல் தொற்றுக்கான வாய்ப்புகளை குறைக்கவும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 
 • ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் – உடல் எடை அதிகமாக இருந்தால் நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது, அதனால் உங்கள் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப உங்கள் எடையை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருங்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். அழற்சி-எதிர்ப்பு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.
 • புகைபிடிக்காதீர்கள் - இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். புகைபிடித்தல் நுரையீரலில் இன்னும் அதிகமான அழற்சியை ஏற்படுத்துகிறது, மேலும் மென்மையான உங்கள் நுரையீரல் திசுக்களுக்குள் துகள்கள் சென்று பிரச்சினை உண்டாக்கும். 
 • உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள் – உங்களது ஆஸ்துமாவை தூண்டும் அல்லது அழற்சியை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை உங்கள் வீட்டிலிருந்து அகற்றுங்கள். புகை, விலங்கு ரோமங்கள் அல்லது பறவை இறகுகள், தூசி, தூசிப் பூச்சிகள், பூஞ்சை, அதிக வெப்பம் அல்லது குளிர் காலநிலை, மகரந்தம், கடுமையான வாசனை போன்றவை இதில் அடங்கும். உங்களைப் பாதிக்கக்கூடியவற்றைக் கண்டறிந்து அவற்றை உங்கள் உடனடிச் சூழலில் இருந்து அகற்றவும். 

மேற்கண்ட வாழ்க்கைமுறை நடவடிக்கைகளை நீங்கள் தீவிரமாக பின்பற்றினால், உங்கள் ஆஸ்துமாவுடன் ஆரோக்கியமான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழலாம். மேலும் உங்கள் பகுதியில் உள்ள ஆஸ்துமா ஆதரவு குழுக்களில் இணைந்து பலன் பெறலாம். 

ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் அறிகுறிகளை கட்டுக்குள் வைத்திருந்தால், இது நமது அன்றாட வாழ்க்கையை, தினசரி நடவடிக்கைகளை பாதிக்காது. விரைவான குணமளிக்கும் நிவாரண மருந்துகளை முடிந்தவரை குறைவாக பயன்படுத்தவும் (வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக). ஆஸ்துமாவை நிர்வகிப்பதில் மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவில் வாழ்க்கைமுறை மாற்றங்களும் முக்கியம். இப்படிப்பட்ட ஒரு பரந்த அணுகுமுறையை நாம் மேற்கொண்டால் நமது ஆரோக்கியம் நிலையான முறையில் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © NMC Pondy. All Rights Reserved