ஸ்ட்ரோக் - சிகிச்சையும் பாதுகாப்பும்

Jan 24, 2023

ஸ்ட்ரோக் என்றால் என்ன? இதயச் செயலிழப்பினால் மாரடைப்பு ஏற்படுவது போல, மூளைச் செயலிழப்பினால் “ஸ்ட்ரோக்” ஏற்படுகிறது. ஸ்ட்ரோக் என்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு அவசரநிலை ஆகும். ஒவ்வொரு வினாடியும் பொன்னானது, அதனால் தாமதப்படுத்தாமல் உடனடி மருத்துவ கவனிப்பை நாட வேண்டும், அப்போது தான் நிரந்தர இயலாமை அல்லது இறப்பைத் தடுக்க முடியும்.

ஸ்ட்ரோக் என்றால் என்ன?

மூளையிலுள்ள இரத்தக் குழாய் சிதைந்து இரத்தம் கசியும் போதோ அல்லது மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போதோ ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இந்தச் சிதைவு அல்லது அடைப்பினால், இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளையின் திசுக்களுக்குச் சென்று அடைவது தடுக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் இல்லாமல் மூளை செல்கள் மற்றும் திசுக்கள் சேதமடைந்து ஒரு சில நிமிடங்களில் அழியத் தொடங்குகின்றன.

மூன்று வகையான ஸ்ட்ரோக்-கை நாம் அறிகிறோம்:

  • டிரான்சியன்ட் இஸ்கிமிக் அட்டாக் (TIA) - மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்கும் நிலை; ஆனால் இது ஒரு தற்காலிக நிலை, பெரும்பாலும் இது தானாகவே சரியாகிவிடும்.
  • இஸ்கிமிக் ஸ்ட்ரோக் - இது தமனியில் ஏற்படும் இரத்தக்கட்டு அல்லது பிளேக்கினால் உண்டாகும் அடைப்பைக் குறிக்கும். இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் TIA ஐ விட நீண்ட காலம் நீடிக்கும் அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
  • ஹெமரேஜிக் ஸ்ட்ரோக் - இது இரத்தக் குழாய் வெடிப்பின் காரணமாகவோ அல்லது இரத்தக் குழாய் கசிவு மூளைக்குள் ஊடுருவுவதன் காரணமாக ஏற்படுவது.

ஸ்ட்ரோக் அறிகுறிகள்

மூளையின் சேதமடைந்த பகுதிகளால் கட்டுப்படுத்தப்படும் உடல் பாகங்களில் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் தென்படும். ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு விரைவாக சிகிச்சை அளிப்பது முக்கியம் என்பதால், ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளை நாம் தெரிந்துகொள்வது அவசியம், அப்போது தான் விரைவாக செயல்பட முடியும்.

ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளில் சில:

  • பக்கவாதம்
  • கை, முகம் மற்றும் கால்களில், குறிப்பாக உடலின் ஒரே பக்கமாக ஏற்படும் உணர்வின்மை அல்லது பலவீனம்
  • மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்வதில் சிக்கல்
  • தெளிவற்ற பேச்சு
  • குழப்பம், தன்னிலை அறியாமை அல்லது பதில் அளிக்காமல் இருப்பது
  • செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள், குறிப்பாக அதிகமான பரபரப்பு
  • பார்வைக் குறைபாடுகள், அதாவது ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ பார்வைக் கறுப்பு அல்லது மங்கலான பார்வை, அல்லது இரட்டைப் பார்வை போன்ற பிரச்சனைகள்
  • நடப்பதில் சிரமம்
  • சமநிலை இழப்பு அல்லது ஒருங்கிணைப்பதில் பிரச்சினை
  • தலைசுற்றல்
  • காரணம் என்னவென்று தெரியாத கடுமையான, திடீர் தலைவலி
  • வலிப்புத்தாக்கங்கள்
  • குமட்டல் அல்லது வாந்தி

ஸ்ட்ரோக் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

நரம்பியல் பரிசோதனை, டயக்னாஸ்டிக் இமேஜிங் மற்றும் பிற சோதனைகளின் மூலம், ஸ்ட்ரோக் ஏற்பட்டிருப்பதை மருத்துவரால் கண்டறிய முடியும்.

நரம்பியல் பரிசோதனையின் போது, நரம்பியல் மருத்துவர் சில பணிகளைச் செய்யச் சொல்வார் அல்லது சில கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொல்வார். நீங்கள் செய்வதையும் சொல்வதையும் வைத்து, உங்கள் மூளைஇயங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று ஆராய்வார்.

பக்கவாதத்தைக் கண்டறிவதற்கான பிற சோதனைகள்:

  • கணினி மயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேன்.
  • ஆய்வக இரத்த பரிசோதனைகள்
  • எலக்ட்ரோ கார்டியோகிராம்
  • மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன்.

ஸ்ட்ரோக்கிற்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

இன்றைய காலகட்டத்தில், மூளையைப் பற்றிய நமது புரிதலிலும், இமேஜிங் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் மற்றும் புதிய மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக,ஸ்ட்ரோக்கிற்கான பல நவீன சிகிச்சை முறைகள் நமக்குக் கிடைக்கின்றன. ஸ்ட்ரோக்கின் வகை மற்றும் ஸ்ட்ரோக் ஏற்பட்ட பிறகு அந்த நபருக்கு எவ்வளவு விரைவில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் மாறுபடும்.

உங்கள் மருத்துவ வரலாறு, தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை மனதில் கொண்டு, உங்களுக்கென பிரத்தியேகமான சிகிச்சை முறையை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

த்ரோம்போலிடிக் மருந்துகள்

இவை இரத்தக் கட்டுகளை கரைக்கும் மருந்துகள்,ஸ்ட்ரோக் அறிகுறிகள் தொடங்கிய முதல் மூன்று மணி நேரத்திற்குள் இவை வழங்கப்படுகின்றன.

மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி

சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக த்ரோம்போலிடிக் மருந்துகள் வழங்கப்பட முடியாத நிலையில், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி எனப்படும் வடிகுழாய் செயல்முறை செய்யப்படுகிறது, ஆனால் அறிகுறிகள் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் இது செய்யப்பட வேண்டும். இந்த செயல்முறையில், ஒரு கதீட்டர் (குழாய் போன்றது) சாதனம் ஒரு பெரிய இரத்த நாளத்தில் செருகப்படுகிறது, அது உங்கள் மூளையிலுள்ள இரத்தக்கட்டு வரை சென்று, அதன் நுனியில் உள்ள ஒரு கருவியின் மூலம் இரத்தக்கட்டை அகற்றுகிறது.

இரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்

பொதுவாக இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான் ஹெமரேஜிக் (இரத்தக்கசிவு) ஸ்ட்ரோக் ஏற்படுகிறது என்பதால், சிகிச்சையின் முக்கிய பகுதியாக இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இரத்தக்கட்டுக்கான ஆதரவு

நமது உடலில் இரத்தப்போக்கை நிறுத்தவும் மற்றும் காயங்களை குணப்படுத்தவும் இரத்தக்கட்டு நிகழ வேண்டும், அதற்கு ஹீமோஸ்டாசிஸ் எனப்படும் செயல்முறை அவசியம். அதற்காக மருந்துகள் அல்லது இரத்தக் காரணிகள் உட்செலுத்தப்படுகின்றன, இதன் விளைவாக இரத்தக்கட்டு எளிதாகிறது.

அறுவை சிகிச்சை

சில சந்தர்ப்பங்களில், உங்கள் மூளையின் மீதான அழுத்தத்தை குறைக்க அறுவை சிகிச்சை அவசியம். குறிப்பாக மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவுகளுக்கு இது உதவும்.

ஸ்ட்ரோக் மறுவாழ்வு

ஸ்ட்ரோக்கின் காரணமாக ஒருவருக்கு அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து மீளவோ அல்லது மாற்றியமைக்கவோ இது உதவும், அத்துடன் முன்பு அவருக்கு இருந்த திறன்களை மீண்டும் பெற உதவும்.

பெரும்பாலானவர்களுக்கு ஸ்ட்ரோக் மறுவாழ்வு மீட்பு என்பது சிகிச்சையின் ஒரு முக்கிய பகுதியாகும். மறுவாழ்வு என்பது பேச்சுரீதியான சிகிச்சை, உடல்ரீதியான சிகிச்சை, தொழில்ரீதியான சிகிச்சை, அறிவாற்றல் சிகிச்சை போன்ற பல வகைப்படும்.

ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை நான் எவ்வாறு குறைப்பது அல்லது முழுவதுமாக எப்படிதடுப்பது?

ஸ்ட்ரோக் - சிகிச்சையும் பாதுகாப்பும்ஸ்ட்ரோக் ஏற்படுவதை முற்றிலுமாகத் தடுப்பது சாத்தியமில்லை என்றாலும், சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் அதற்கான ஆபத்தை வெகுவாகக் குறைக்கலாம் :

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும்

ஆரோக்கியமான உணவு உண்பது மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் போன்ற பழக்கவழக்கங்கள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். 

ஆபத்தான வாழ்க்கைமுறை தேர்வுகளைத் தவிர்க்கவும்

புகைபிடித்தல், புகையிலை, கேளிக்கை போதைப்பொருள், பரிந்துரைக்கப்பட்ட மருந்து, மதுபானம்ஆகியவற்றின் தவறான அல்லது எல்லை-மீறிய பயன்பாடு, ஆகியவற்றின் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

உங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளவும்

உடல் பருமன், அசாதாரண இதயத்துடிப்புகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு போன்ற பலவற்றினால் உங்களுக்கு இஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

வருடம் ஒரு முறை உடல்நலப்பரிசோதனை செய்து கொள்ளுங்கள் 

வருடாந்தர உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வதால், எந்த அறிகுறிகளையும் நீங்கள் உணரும் முன்பே அவற்றை உண்டாக்கும் காரணிகளை கண்டறியலாம்.

ஸ்ட்ரோக்கிற்குப் பிறகு என்னை நான் எப்படி கவனித்துக் கொள்வது?

உங்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டால், சிகிச்சைக்கான திட்டம் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுடன் பேசுவார். சில மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் அவர் பரிந்துரைக்கலாம், அதை நீங்கள் முடிந்தவரை நெருக்கமாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

அதைத் தவிர நீங்கள் செய்யக்கூடிய மற்ற விஷயங்கள்:

  • உங்கள் மருந்தை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
  • மறுவாழ்வு/சிகிச்சை சந்திப்புகளுக்கு கட்டாயம் செல்லவும்
  • உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
  • உங்களால் முடிந்தவரை, பரிந்துரைக்கப்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்யுங்கள்

ஸ்ட்ரோக் என்பது உயிருக்கு ஆபத்தான அவசரநிலை, அதை நீங்களே சுயமாக கண்டறியவோ அல்லது அதற்கென சுயமாக சிகிச்சை செய்யவோ முயற்சிக்கக்கூடாது. உங்களுக்கோ, அல்லது உங்களுடன் இருக்கும் ஒருவருக்கோ, ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் உள்ளூர் அவசர சேவை எண்ணை அழைக்கவும். சிகிச்சையை விரைவாக ஆரம்பித்தால், நிரந்தர மூளை பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved