நுரையீரல் புற்றுநோய்க் காரணிகள்

Feb 22, 2023

நுரையீரல் புற்றுநோய்க் காரணிகள்நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?

உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரும் போது அதை புற்றுநோய் என்கிறோம். நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

புற்றுநோய் நுரையீரலில் தொடங்கி உடலின் மற்ற உறுப்புகளுக்குப் பரவக்கூடும், அல்லது மற்ற உறுப்புகளிலிருந்து தொடங்கி நுரையீரலுக்குப் பரவக்கூடும்.

நுரையீரல் புற்றுநோயின் வகைகள்

நுரையீரல் புற்றுநோய் இரண்டு வகைப்படும் –அவை சிறிய-செல் நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறிய-செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் ஆகும்.

நுண்ணோக்கியின் (மைக்ரோஸ்கோப்) கீழ் பார்க்கும் போது புற்றுநோய் செல்கள் எப்படி காணப்படுகின்றன என்பதை இந்த வகைகள் குறிப்பிடுகின்றன. சிறிய-செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் தான் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

ஸ்டேஜிங்

நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அது நுரையீரல், நிணநீர் கணுக்கள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் கண்டறிய மற்ற சோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த செயல்முறை ஸ்டேஜிங் என்று அழைக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோயின் வகை மற்றும் நிலையின் அடிப்படையில்,உங்களுக்கு என்ன வகையான சிகிச்சை தேவைப்படும் என்பதை மருத்துவர்கள் நிர்ணயிப்பார்கள்.

நுரையீரல் புற்றுநோய்க்கான பொதுவான நிலைகள் பின்வருமாறு:

 • நிலை 0: புற்றுநோய் நுரையீரல் அல்லது மூச்சுக்குழாயின் மேல்புறத்தில் உள்ளது. இது நுரையீரலின் மற்ற பகுதிகளுக்கோ அல்லது நுரையீரலுக்கு வெளியேயோ பரவவில்லை.
 • நிலை I: புற்றுநோய் நுரையீரலுக்கு வெளியே பரவவில்லை.
 • நிலை II: இதுபுற்றுநோய் நிலை I ஐ விட தீவிரமானது, நுரையீரலின் உள்ளே உள்ள நிணநீர் மண்டலங்களுக்கு பரவியுள்ளது அல்லது நுரையீரலின் ஒரே மடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் உள்ளன.
 • நிலை III: இதுபுற்றுநோய் நிலை II விட தீவிரமானது, அருகிலுள்ள நிணநீர் கணுக்கள் அல்லது பகுதிகளுக்குப் பரவியுள்ளது அல்லது ஒரே நுரையீரலின் வெவ்வேறு மடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் உள்ளன .
 • நிலை IV: மற்றொரு நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள திரவம், இதயத்தைச் சுற்றியுள்ள திரவம் அல்லது தொலைதூர உறுப்புகளுக்கு புற்றுநோய் பரவியுள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க் காரணிகள்நுரையீரல் புற்றுநோய்க் காரணிகள்

பின்வருபவை நுரையீரல் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் சில காரணிகள் ஆகும்:

புகை பிடித்தல்

புகை பிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான மிகப்பெரிய காரணம் என்று அறியப்படுகிறது. வேறொருவர் புகைபிடிக்கும் போது நீங்கள் அருகிலிருந்து சுவாசிப்பதும் (செகண்ட்-ஹேண்ட் ஸ்மோகிங்) இதில் அடங்கும்.

லேசான அல்லது அவ்வப்போது புகைபிடிப்பது கூட நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, நீங்கள் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பு.

பணியிடங்களில் இரசாயனப் பொருட்கள்

சில இரசாயனப் பொருட்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கா மற்றும் டீசல் வெளியேற்றம் ஆகியவை இதில் அடங்கும். பணியிடங்களில் வேலை செய்பவர்கள் இவற்றுக்கு வெளிப்படுத்தப்படலாம்.

ஆஸ்பெஸ்டாஸ் கப்பல் மற்றும் கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பணியிடங்களில் வேலை செய்யும் போது புகைபிடித்தல் ஆஸ்பெஸ்டாஸ் வெளிப்பாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சிலிக்கா என்பது கண்ணாடி தயாரித்தல் மற்றும் செங்கல் கட்டுதல் போன்ற சில கட்டுமானப் பொருள் தொழில்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். கொத்தனார் வேலை செய்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் சற்று அதிகரிக்கலாம்.

டீசல் எஞ்சின் வெளியேற்றும் புகை நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் மற்றும் மெக்கானிக் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படலாம்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். நீங்கள் தொடர்ந்து வெளிப்படும் காற்று மாசுபாட்டின் அளவைப் பொறுத்தது ஆபத்து அதிகரிக்கும்.

நுரையீரல் நோய்கள் பின்னணி

உங்களுக்கு ஏற்கனவே நுரையீரல் நோய்கள் இருந்திருந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த ஆபத்துகள் பொதுவாக அதிகம்.

நாட்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் (சிஓபிடி) நாட்பட்ட தடுப்பு மூச்சுக்குழாய் நோய் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எம்பிஸிமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நீண்டகால நுரையீரல் நோய்களைக் குறிக்கிறது. பொதுவாக சிகரெட் புகை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருளை சுவாசிப்பதன் விளைவாக, உங்கள் நுரையீரலுக்கு நீண்டகால சேதம் ஏற்படுவதால் சிஓபிடி உருவாகிறது.

ரேடான் வாயுவுக்கான வெளிப்பாடு

ரேடான் வாயு என்பது இயற்கையாக நிகழும் கதிரியக்க வாயு ஆகும், இது அனைத்து பாறைகள் மற்றும் மண்ணில் உள்ள சிறிய அளவிலான யுரேனியத்திலிருந்து வருகிறது. ரேடான் வாயு வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களில் உருவாகலாம். ரேடாநுக்கான வெளிப்பாடு சிறிய எண்ணிக்கையிலான நுரையீரல் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது, அந்தச் சூழலில் நீங்கள் புகைபிடித்தால் ஆபத்து அதிகரிக்கிறது.

நோய்க்கான குடும்ப வரலாறு

உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் (பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர் போன்றோர்) இருந்தால் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து உங்களுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

தொடர்புடைய வலைப்பதிவு: Healthy Habits That Can Help Deal with Lung Cancer

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

 • மோசமாகும் அல்லது விடாமல் தொடர்ந்து இருக்கும் இருமல்.
 • நெஞ்சு வலி.
 • மூச்சுத்திணறல்.
 • இருமலைத் தொடர்ந்து இரத்தம் வெளிப்படுதல்.
 • எல்லா நேரத்திலும் மிகவும் சோர்வாக உணர்தல்.
 • காரணமின்றி எடை இழப்பு.

மற்ற நோய்கள் இருந்தாலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம் என்பதால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கண்டறியுங்கள்.

சிகிச்சை வகைகள்

நுரையீரல் புற்றுநோயின் வகை மற்றும் அது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைப் பொறுத்து, நுரையீரல் புற்றுநோய்க்கு பல வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

சிறிய-செல் அல்லாத நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இலக்கு சிகிச்சை அல்லது இந்த சிகிச்சைகளின் கலவை மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். சிறிய-செல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 • அறுவை சிகிச்சை. புற்றுநோய் திசுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கின்றனர்.
 • கீமோதெரபி. புற்றுநோயைச் சுருக்கவோ அல்லது கொல்லவோ சிறப்பு மருந்துகளைப் பயன்படுத்துதல். மருந்துகள், நீங்கள் வாய்வழி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளாகவோ அல்லது உங்கள் சிரைக்குள் செலுத்தப்படும் மருந்துகளாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்.
 • கதிர்வீச்சு சிகிச்சை. புற்றுநோயைக் கொல்ல உயர் ஆற்றல் கதிர்களைப் (எக்ஸ்-கதிர்களைப் போன்றது) பயன்படுத்துதல்.
 • இலக்கு சிகிச்சை. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க மருந்துகளைப் பயன்படுத்துதல். மருந்துகள், நீங்கள் வாய்வழி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளாகவோ அல்லது உங்கள் சிரைக்குள் செலுத்தப்படும் மருந்துகளாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்.

நுரையீரல் புற்றுநோயுடன் வாழ்வது

நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடித்து நவீன சிகிச்சைகள் கொடுப்பது, நுரையீரல் புற்றுநோயால் தப்பிப்பிழைப்பவர்கள் நீண்ட காலம் வாழ உதவுகிறது.

புற்றுநோயுடன் சிறப்பாக வாழ்வதற்கான சில குறிப்புகள் இங்கே.

 • உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவது முக்கியம். உங்கள் நுரையீரல் புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சரியான நேரத்தில் பொருத்தமான கவனிப்பு பெறுவது அவசியம்.
 • உங்கள் புற்றுநோய் மருத்துவருடன் கலந்தாலோசித்து ஆரோக்கியமாக வாழ நடவடிக்கைகள் எடுக்கவும்.
 • புற்றுநோயால் தப்பிப்பிழைப்பவர்களுக்கு பழி அல்லது களங்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். உங்கள் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி ஒரு சமூக சேவகர் அல்லது மனநல நிபுணரிடம் பேசுவது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © NMC Pondy. All Rights Reserved