செவித்திறன் இழப்பு - காரணங்கள் மற்றும் தடுப்பு

Feb 23, 2024

செவித்திறன் இழப்பு - செவித்திறன் இழப்பின் அளவு என்றால் என்ன?

நமது செவித்திறன் வயதாக ஆக குறைகிறது என்பதுடன், பொதுவாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுகிறது. செவிப்புலன் அமைப்பின் எந்தவொரு பகுதியும் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் அதை செவித்திறன் இழப்பு என்கிறோம். வெளிப்புற காது, நடுப்புற காது, உட்புற காது, செவிப்புலன் நரம்பு மற்றும் மூளையில் உள்ள செவிவழி பாதைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இரண்டு காதுகளிலும் செவித்திறன் இழப்பு ஏற்படலாம் அல்லது ஒரு காதில் மட்டுமே ஏற்படலாம். மேலும் இரண்டு காதுகளின் கேட்கும் திறனும் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கலாம், அதாவது ஒரு காதில் மற்றதை விட அதிக செவித்திறன் இழப்பை நீங்கள் உணரலாம். செவித்திறன் இழப்பு படிப்படியாக ஏற்படலாம் அல்லது திடீரென ஏற்படலாம். சிறு குழந்தைகளிடையே செவித்திறன் இழப்பு ஏற்படும் போது அது அவர்களின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறன்களை பாதிக்கிறது. குழந்தைகளில் செவித்திறன் இழப்பு பொதுவாக பிறவியில் ஏற்படும் நோய்களின் காரணமாகவோ அல்லது அதிர்ச்சியின் காரணமாகவோ ஏற்படுகிறது.

வயதாக ஆக கேட்கும் திறன் படிப்படியாக குறைகையில் பெரும்பாலான நேரங்களில் நாம் அதை கவனிக்க தவறுகிறோம். பின்வரும் சந்தர்ப்பங்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்கள் செவித்திறன் குறைந்திருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்:

  • பிறர் சொல்வதை முதன்முறை கேட்க இயலாமல், திரும்பத் திரும்ப அவர்களை சொல்லச் சொல்லி கேட்பது.
  • உரையாடல்களைப் பின்தொடர்வதில் சிக்கல் ஏற்படுவது, குறிப்பாக திறந்தவெளி அலுவலகங்கள், உணவகங்கள் அல்லது விமான நிலையம் போன்ற சத்தம் அதிகமான இடங்களில்.
  • டிவி-யின் ஒலியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
  • உங்களுக்கு “டின்னைடிஸ்” என்ற மருத்துவ நிலை ஏற்படுவது, அதாவது உங்கள் காதில் தொடர்ந்து ரீங்காரமிடும் ஒலி.
  • உங்களுக்கு அடிக்கடி காதுவலி ஏற்படுவது.
  • உங்களுக்கு சமநிலை இழப்பு அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது.

செவித்திறன் இழப்பின் வகைகள்

செவிப்புலன் அமைப்பின் பாதிக்கப்பட்ட பகுதி எது என்பதன் அடிப்படையில், செவித்திறன் இழப்பு பொதுவாக 2 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

  • கடத்தும் (Conductive) செவித்திறன் இழப்பு - இந்த வகையான செவித்திறன் இழப்பு வெளிப்புற காது பாதை மற்றும் நடுப்புற காதை பாதிக்கிறது. காது மெழுகு அல்லது காது பாதையில் ஏதேனும் சிறிய பொருள் அடைத்துக் கொள்வதால் ஒலி காதினுள்ளே செல்ல இயலாமல் தடுக்கப்படலாம். நடுப்புற காதில் திரவம், தொற்று, எலும்பு பிரச்சினை அல்லது காது டிரம்மில் காயம் போன்றவற்றினாலும் இது ஏற்படலாம்.
  • சென்சோரினியூரல் செவிப்புலன் இழப்பு (SNHL) - உட்புற காது அல்லது காதை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் சேதம் ஆகியவற்றால் இது ஏற்படுகிறது. SNHL நோயாளிகளினால் மென்மையான ஒலிகளைக் கேட்பது சிரமம், மேலும் உரத்த ஒலிகள் கூட குழப்பமானதாக அல்லது தெளிவற்றதாகக் கேட்கப்படலாம். இது வயது முதிர்வு, தலையில் பலத்த அடி, உட்புற காது குறைபாடுகள், உரத்த சத்தங்களுக்கு நீண்டகால வெளிப்பாடு, சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்லது நீரிழிவு போன்ற நீண்ட கால நோய்களால் கூட ஏற்படலாம்.

நோய் கண்டறிதல் மற்றும் சோதனைகள்

உங்கள் செவித்திறன் இழப்புக்கான காரணத்தைக் கண்டறிய, உங்கள் மருத்துவர் காது பாதையில் தடைகளோ அல்லது தொற்றுகளோ உள்ளதா என்று பரிசோதிக்க சில சோதனைகளைச் செய்வார். கட்டி (tumour) அல்லது உள் காயம் இருப்பதாக அவர்கள் சந்தேகித்தால் CT ஸ்கேன் அல்லது MRI செய்யலாம். ஒரு ஒலியியல் நிபுணரிடம் சென்று செவிப்புலன் சோதனைகள் செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கலாம். ப்யூர்-டோன் (pure-tone) சோதனை, ஓட்டோஅகௌஸ்டிக் (otoacoustic) எமிஷன்ஸ் சோதனை மற்றும் செவிப்பறை சிதைந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க டிம்பனோமெட்ரி (tympanometry) சோதனைகள் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் செவித்திறன் இழப்பின் அளவையும் மருத்துவர் பரிசோதிப்பார்.

செவித்திறன் இழப்பின் அளவு என்றால் என்ன?

செவித்திறன் இழப்பின் பல்வேறு அளவுகள் உள்ளன. சிலருக்கு மற்றவர்களை விட கடுமையான செவித்திறன் இழப்பு இருக்கும். உங்கள் செவித்திறன் இழப்பின் அளவைக் கண்டறிய உங்கள் மருத்துவர் செவிப்புலன் சோதனைகளை செய்யலாம். 10 முதல் 15 டெசிபல் (dB) வரையுள்ள செவித்திறன் இழப்பு வரம்பு “சாதாரணமானது” (“normal”) என வகைப்படுத்தப்படுகிறது, அதாவது செவித்திறன் இழப்பு ஏதும் இல்லை.

கீழே உள்ள அட்டவணை செவித்திறன் இழப்பின் பொதுவான வகைப்பாட்டைக் காட்டுகிறது:

செவித்திறன் இழப்பின் அளவு செவித்திறன் இழப்பு வரம்பு (dB HL)
சாதாரணமானது ~ 10 to 15
சிறிதளவு இழப்பு 16 to 25
லேசான இழப்பு 26 to 40
மிதமான இழப்பு 41 to 55
ஓரளவு கடுமையான இழப்பு 56 to 70
கடுமையான இழப்பு 71 to 90
மிகக் கடுமையான இழப்பு 91 +
நன்றி: Clark, J.G (1981). Uses and abuses of hearing loss classification. Asha, 23,493-500.

மேலாண்மை மற்றும் சிகிச்சை

ஒவ்வொரு நோயாளிக்குமான சிகிச்சையானது அவர்களது செவித்திறன் இழப்பின் வகை மற்றும் அளவிற்கு ஏற்ப இருக்கும். கடத்தும் செவித்திறன் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு காது மெழுகு அல்லது சிறிய பொருட்களை அகற்றக்கூடிய மருந்துகள் அல்லது செயல்முறைகள் பரிந்துரைக்கப்படும். சென்சார்நியூரல் செவித்திறன் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது காக்லியர் உள்வைப்புகள் அல்லது செவிப்புலன் கருவிகள் (ஹியரிங் எய்டு) போன்றவை மூலம் சிகிச்சை அளிக்கப்படும். கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு கட்டியை சுருக்கும் மருந்துகளோ அல்லது அதை முழுமையாக அகற்ற அறுவை சிகிச்சையோ பரிந்துரைக்கப்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

வயதின் காரணமாக ஏற்படும் செவித்திறன் இழப்பு போன்ற சில வகையான செவித்திறன் இழப்பைத் தடுக்க இயலாது. ஆனால், உரத்த சத்தங்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதன் காரணமாக ஏற்படும் நிலையை நாம் நிச்சயமாக தவிர்க்கலாம்.

அதற்காக நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:

  • இசைக் கச்சேரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் அல்லது உயர் சத்தம் எழுப்பும் இயந்திரங்களுடன் பணிபுரிதல் போன்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான காதுகுழாய்கள் (earmuffs) / காது செருகிகளை (ear plugs) அணியலாம்.
  • ஹெட்ஃபோன் பயன்படுத்தும் போது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது கேட்கும் அளவுக்கு உங்கள் ஹெட்ஃபோன்களின் ஒலியளவைக் குறைத்து வையுங்கள்.
  • புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்.
  • காது பாதையில் q-டிப்ஸ் அல்லது ஹேர் பின்கள் போன்ற எதையும் செருக வேண்டாம்.
  • இருதயம் மற்றும் மற்ற வாழ்க்கை-முறை நோய்களைத் தடுக்க முறையாக உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.

செவித்திறன் இழப்பின் காரணமாக நீங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாக, உங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போல உணரலாம். அதனால் எளிதில் விரக்தி, எரிச்சல் மற்றும் கோபம் ஏற்படலாம். கடுமையான செவித்திறன் இழப்பு உள்ளவர்கள் படபடப்பாகவோ அல்லது மனச்சோர்வடைந்தோ காணப்படலாம்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கோ செவித்திறன் இழப்பு ஏற்பட்டால், சரியான மருத்துவரீதியான மற்றும் உளவியல்ரீதியான ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இந்த நிலையை சரிசெய்ய தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு, உபகரணங்களை உபயோகிப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் இந்நிலையை சுலபமாக சமாளித்து, ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழலாம்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved