இதய நோய்ச் சிகிச்சையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

Aug 30, 2023

இதய நோய்ச் சிகிச்சையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

வாழ்க்கை முறை குறைபாடுகளால் இன்று உலகம் முழுவதும் இதய நோய்கள் (CVD) அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் மட்டுமே, 17.7 மில்லியன் இறப்புகளுக்கு ஸ்டிரோக் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் போன்றவை காரணமாக அமைகின்றன என்றும், இதில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் அடக்கம் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவது வருத்தம் அளிக்கிறது.  

கடந்த பத்து ஆண்டுகளில் இதயப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதயச் சிகிச்சையில் முன் எப்போதும் இல்லாத புரட்சிகளை நாம் காண்கிறோம்.  இதில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. நோயாளிகளின் இதய நிலைமையை முன்கூட்டியே கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உதவுகின்றன.

இதய நோய்ச் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சில தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:

தனிப்பயனாக்கப்பட்ட இதய மாதிரிகள்

இவை, இதய நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட 3D மாதிரிகள் ஆகும். இதய நோயின் தன்மையைப் புரிந்து கொள்ள இவை மருத்துவருக்கு உதவுகின்றன. இதயக் குறைபாடுகளுடன் (பிறவி இதய நோய்கள்) பிறந்த குழந்தைகளின் MRI ஸ்கேனிலிருந்து இது போன்ற 3D அச்சிடப்பட்ட மாதிரிகளை லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தனிப்பயனாக்கும் அணுகுமுறை சிறந்த சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவும்.

ஸ்டிரோக்கை எதிர்கொள்ள தோல் பேட்ச் (patch)

ஒரு நோயாளிக்கு ஸ்டிரோக் ஏற்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்கையில் உடனடியாக ஆம்புலன்சிலேயே பொருத்தக்கூடிய தோல் பேட்ச் ஒன்றை நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். கிளிசரில் ட்ரைநைட்ரேட் என்ற மருந்தை வழங்கும் இந்த பேட்ச் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, ஸ்டிரோக்கினால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்கிறது. 

ஸ்டிரோக் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்குவது என்பது ஸ்டிரோக் சிகிச்சையில் ஒரு புரட்சியாகும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சுக்குள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மீட்புக்கு பெரிதும் உதவும். இந்த பேட்ச்சின் பாதுகாப்புத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால், ஆம்புலன்சில் உள்ள துணை மருத்துவர்கள் மட்டுமல்லாமல், வழக்கமான மருத்துவச் சிகிச்சை வசதிகள் இல்லாத இடங்களில் உள்ள மருத்துவர்களும் இதைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

உடலில் பொருத்தக்கூடிய இதயத்துடிப்பு மானிட்டர்கள்

இதயச் செயலிழப்பு ஏற்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படும் - இதயத்துடிப்பு மிகவும் மெதுவாகவோ, மிகவும் வேகமாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ இருக்கும். தற்போது இதயத்துடிப்பில் உள்ள ஒழுங்கற்ற தன்மையைக் கண்டறிய ECG பதிவைப் பயன்படுத்துகிறோம். ECG-ஆனது அந்தக் குறிப்பிட்ட தருணத்தின் பதிவை மட்டுமே கொடுக்கும். நோயாளியின் இதய ஆரோக்கியத்தைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு நீண்ட காலத்திற்கு இதயத்துடிப்பைக் கண்காணிக்க மருத்துவர் விரும்பினால்?...அதற்கென பொருத்தக்கூடிய இதய மானிட்டர்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை இதயத்துடிப்பைப் பதிவுசெய்ய தோலின் கீழ் பொருத்தக்கூடிய சிறிய சாதனங்கள் ஆகும்.

கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் நானோ பொருட்கள்

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது பல்வேறு இதய நோய்கள் ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரத்தத்தில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (LDL) அளவைக் குறைக்க ஸ்டேடின்கள் உதவுகின்றன என்றாலும், அவை தசைகள் போன்ற பிற திசுக்களை பாதிக்கலாம், அத்துடன் சிலருக்கு ஸ்டேடின்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளை அவை மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு சரியாக வழங்கக்கூடிய நானோ பொருட்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நானோ பொருட்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறியவையாக இருந்தாலும், மிக அதிக நிலைத்தன்மை கொண்டவை, அத்துடன், குறிப்பிட்ட தளங்களுக்கு மருந்துகள் வழங்கியவுடன் அவை தானாக மக்கிவிடும்.

இதய நிலையைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றைப் பயன்படுத்துதல்

பொதுவாக மனிதர்கள் தீர்க்கும் சிக்கலான பிரச்சினைகளைக் கையாண்டு தீர்க்கக்கூடிய ஒரு இயந்திரத்தின் திறன் தான், செயற்கை நுண்ணறிவு எனப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, இயந்திரங்களால் பெரிய அளவிலான தரவை துல்லியமாகவும் விரைவாகவும் பகுப்பாய்வு செய்ய முடிகிறது, இதன் விளைவாக நோயாளியின் தரவுகளில் குறிப்பிட்ட வடிவங்களைக் கண்டறிவதன் மூலம் முடிவெடுத்தல், துல்லியமாக நோயறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டமிடல் ஆகியவற்றையும் இயந்திரங்கள் செய்வது சாத்தியமாகியுள்ளது.

கார்டியோவாஸ்குலர் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இப்போது செயற்கை நுண்ணறிவை மருத்துவப் பயிற்சியுடன் இணைத்து சிறந்த முறையிலான பராமரிப்பு வழங்கி வருகின்றனர். அதற்கான இரண்டு உதாரணங்கள் இதோ:

  1. ஸ்டிரோக் ஏற்பட்டுள்ளவர்களுக்கு - கணினிக்கு CT தரவை பகுப்பாய்வு செய்யவும், ஸ்கேனை பரிசோதிக்கவும், பக்கவாதத்தை கண்டறியவும் பயிற்சி அளிக்கப்படுகிறது, இதனால் மதிப்புமிக்க நேரம் மிச்சமாகிறது.
  2. இதயப் பிரச்சனைகளைத் தடுக்கும் – ECG-களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் இதய பம்பில் இருக்கும் ஏதேனும் அசாதாரண நிலைகளைக் கண்டறிந்து, தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து நோயாளியைக் காப்பாற்ற முடிகிறது.

மருத்துவச் சிகிச்சையில் பல புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னமும் பல முன்னேற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதய நோய்ச் சிகிச்சையின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய சிகிச்சைகள் ஏதேனும் உங்கள் நிலைக்கு பொருத்தமாக இருக்குமா என்பதையும், அவை இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவுமா என்பதையும் அறிய, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved