குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால் என்ன செய்வது

Mar 31, 2023

குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் என்ன செய்வதுஅன்றாட வீட்டுப்பொருட்களை யார் வேண்டுமானாலும் தவறுதலாக விழுங்கி விடலாம். ஆனால், கைக்குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு, கையில் கிடைத்ததை வாயில் போடும் ஆர்வமும் பழக்கமும் இயற்கையிலேயே இருப்பதால், விழுங்குவதற்கான வாய்ப்பும் ஆபத்தும் அவர்களுக்கு அதிகம்.

குழந்தை ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன ஆகும்?

பல சந்தர்ப்பங்களில், விழுங்கப்பட்ட பொருள் செரிமானப் பாதையினால் செயலாக்கப்பட்டு, அப்பொருள் இயற்கையாகவே உடலை விட்டு வெளியேறி விடும்.
மற்ற சந்தர்ப்பங்களில், பொருள் உடலின் உட்பாகங்களில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது காயங்களை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட சூழல்களில், நீங்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

குழந்தை ஒரு பொருளை விழுங்கி விட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

பல்வேறு பொருட்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த உங்கள் குழந்தை திடீரென்று வாயில் எதையாவது போட்டு அது சிக்கிக் கொண்டால், அது ஒரு பயங்கரமான தருணமாக இருக்கும். 

விழுங்கப்பட்ட பொருள் காற்றுப்பாதையைத் தடுத்தால் உடனடியாக அந்த அறிகுறிகளை நீங்கள் காணலாம் – குழந்தைக்கு மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், இருமல்ஆகியவை ஏற்படலாம்.

குழந்தை ஒரு பொருளை விழுங்கி அது தொண்டையில் சிக்காமல் வயிற்றுக்குள் சென்று விட்டால், உடனடியாக அறிகுறிகள் எதுவும் தென்படாது. பொருள் ஏற்கனவே செரிமான மண்டலத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், அது இயற்கையாகவே வெளியேறி விடும். அப்படி வெறியேறுவதில் சிக்கல்கள் இருந்தால் அதற்கான அறிகுறிகள் பின்னர் தோன்றும்– அவை வாந்தி, உமிழ்நீர், குமட்டல், மார்பு அல்லது தொண்டை வலி, சாப்பிட மறுப்பது, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை.

உங்கள் குழந்தை ஒரு பொருளை விழுங்கி விட்டால் - அது இயற்கையாகவே வெளியேறிவிடும் என்று நீங்கள் நம்பினாலும் கூட, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.

விழுங்கப்பட்ட பொருள் மருத்துவரால் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

உங்கள்குழந்தையின் பொதுவான மருத்துவ வரலாற்றைப் பற்றி மருத்துவர் கேட்பார். பின்னர், குறிப்பாக என்ன விழுங்கப்பட்டது, விழுங்கப்பட்ட நேரம் மற்றும் நோயாளிக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்பதை அவர் அறிய விரும்புவார். பிறகு, உடல் பரிசோதனை செய்வார், குறிப்பாக வாய், தொண்டை மற்றும் நுரையீரலில் கவனம் செலுத்துவார்.

பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகளை மருத்துவர் செய்யலாம்:

  • கழுத்து, மார்பு மற்றும் அடிவயிற்றின் எக்ஸ்-ரே: நாணயங்கள், பேட்டரிகள், உலோக பொம்மைகள் மற்றும் எலும்புகள் போன்ற பொருட்களை கண்டுபிடிக்க இது உதவும்.
  • பேரியம் கொண்ட மேம்படுத்தப்பட்ட எக்ஸ்-ரேக்கள்: வழக்கமான எக்ஸ்-ரேக்களில் காணப்படாத சிக்கிய பொருட்களைக் கண்டறிய இது பயன்படுத்தப்படலாம்.
  • பிரத்தியேகமான ஃபைபர் ஆப்டிக் ஒளி (fiber optic light) மூலம்நேரடியாக ஆய்வு செய்யலாம் அல்லது பல் கண்ணாடி(dental mirror) மூலம் மறைமுக ஆய்வு செய்யலாம்.
  • உணவுக்குழாயில் உள்ள பொருட்களைப் பார்க்க ஃபைபர் ஆப்டிக் ஸ்கோப் (எண்டோஸ்கோபி ) செய்யலாம். 

மருத்துவரை அணுகும் முன், வீட்டில் செய்யக்கூடிய முதலுதவி அல்லது வைத்தியம் என்ன?

விழுங்கப்பட்ட பொருள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தினால், அடிப்படை முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தையால் சத்தம் போடவோ அல்லது பேசவோ முடிந்தால், அடிவயிற்றை அழுத்தித் தள்ள முயற்சிக்காதீர்கள். பொருளை வெளியேற்ற முயற்சிக்க குழந்தைக்கு வாய்ப்பு கொடுங்கள். குழந்தை பதட்டமாக இருக்கும் நிலையில் அரவணைப்பும் நம்பிக்கையும் கொடுங்கள்.

விழுங்கப்பட்ட பொருளுக்கான சிகிச்சைகள் என்ன?

  • விழுங்கப்பட்ட பொருள் பொத்தான் பேட்டரி அல்லது காந்தங்கள் இல்லை என்றாலோ, உங்கள் குழந்தைக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலோ, உங்கள் மருத்துவர் "காத்திருந்து பார்க்கும்" அணுகுமுறையை மேற்கொள்ளலாம். அத்துடன் எக்ஸ்ரே அல்லது பிற இமேஜிங் சோதனைகளைப் பயன்படுத்தி பொருளின் நிலையைக் கண்காணிக்கலாம். பொருட்கள் பொதுவாக ஒன்று-இரண்டு வாரங்களுக்குள் உடலிலிருந்து இயற்கையாகவே வெளியேறலாம். நான்கு வாரங்களுக்குள் பொருட்கள் வெளியேறவில்லை என்றால், குழந்தையை இரைப்பைக் குடலியல் நிபுணரிடம் காண்பித்து மேலும் மதிப்பீடு செய்யும்படி உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
  • பரிசோதனையில் தொண்டையின் பின்புறத்தில் ஒரு பொருள் காணப்பட்டால், அதை அகற்ற மருத்துவர் முயற்சி செய்யலாம்.
  • குரல் பெட்டியின் பகுதியைச் சுற்றி பொருள் காணப்பட்டால், உடனடியாக அது அகற்றப்பட வேண்டும்.
  • உணவுக்குழாயில் சிக்கியுள்ள உணவு உள்ளிட்ட பொருட்களை அகற்ற, ஒரு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்  ஃபைபர் ஆப்டிக் ஸ்கோப்பைப் பயன்படுத்துவார். அறுவை சிகிச்சை தேவையில்லை. சில சமயம், மேல் உணவுக்குழாயில் உள்ள ஒரு பொருளின் கீழே ஒரு வடிகுழாயை வைத்து, பின்னர் ஒரு பலூன் ஊதப்பட்டு, பொருள் வாய்-வழியாக வெளியே எடுக்கப்படலாம்.
  • உணவுக்குழாயில் சிக்கியுள்ள பொருட்களுக்கு, குறிப்பாக உணவுப் பொருட்களுக்கு, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முயற்சி செய்யலாம். நாக்கின் கீழ் வைக்கப்படும் “நைட்ரோகிளிசரின்” மற்றும் IV மூலம் வழங்கப்படும் “குளுகோகன்” போன்ற மருந்துகள் உணவுக்குழாயை தளர்த்தி, உணவை வயிற்றுக்கு செல்ல அனுமதிக்கும், பின்னர் அது இயற்கையாக வெளியேறி விடலாம்.

சிகிச்சைக்குப் பிறகு பின்தொடர்தல் தேவையா?

சிகிச்சை செய்து பொருளை வெளியேற்றிய பிறகு பின்தொடர்தல் பரிந்துரைக்கப்படுகிறது. விழுங்கப்பட்டு உடலுக்குள்ளேயே தங்கி விட்ட பொருள்கள் வெளியேறுவதை உறுதிசெய்ய அவ்வப்போது எக்ஸ்-ரேக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். உணவுக்குழாய்ப்பகுதியில் இருந்து ஒரு பொருளை அகற்றிய பிறகு, உணவுக்குழாயின் உடற்கூறியல் சாதாரணமாக இருப்பதை உறுதி செய்ய, ஒரு முழு மதிப்பீடு அவசியம். 

குழந்தைகள் பொருட்களை விழுங்குவதை எவ்வாறு தடுப்பது?

  • நாணயங்கள், பொம்மை பாகங்கள், பொத்தான் பேட்டரிகள் உள்ளிட்ட சிறிய பொருட்களை சிறு குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
  • குழந்தைகளுக்கு பொருத்தமான, சாப்பிடக்கூடிய அளவுகளில் உணவு அளியுங்கள், பெரிதாக இருந்தால் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
  • குழந்தைகளுக்கு திடப்பொருட்களை விழுங்குவதில் சிரமம் இருந்தால், திரவமாகவோ அல்லது மென்மையான திட உணவாகவோ அளியுங்கள்.

எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள் 

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண் மட்டத்தில் வீட்டைச் சுற்றிப் பார்த்து, குழந்தைப் பாதுகாப்பிற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். அப்போது தான் நீங்கள் இதுவரை பார்த்திராத விஷயங்களை நீங்களே கவனிப்பீர்கள் - குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டிய பொருட்கள் அல்லது அறைக்கு வெளியே நகர்த்த வேண்டிய பொருட்கள் கண்ணுக்குத் தட்டுப்படும்.

குழந்தைகள் விழுங்கும் மிகவும் பொதுவான மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டிய பொருள் ரூபாய் நாணயங்கள் மற்றும் காந்தப்பொருட்கள் ஆகும், அதனால் அவற்றை கைக்கு எட்டாத இடத்தில் வைப்பதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாட்டிலும் கேளிக்கையிலும் அதிக நேரம் செலுத்துவதால் மிகுந்த கவனம் தேவை - பல சிறிய பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளில் உள்ள பொத்தான் பேட்டரிகள் அல்லது சிறிய பொருட்கள் ஆகியவற்றை விழுங்கும் ஆபத்து உள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் ஆபத்துகள் நிகழலாம் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் குழந்தை மீது கவனம் செலுத்துங்கள்.

இறுதியாக ஒருவார்த்தை - குழந்தைகளுடன் அடிக்கடி உரையாட வேண்டும், அவர்களின் டீனேஜ் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும். உணவு-அல்லாத பொருட்களை விழுங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும், நச்சுப் பொருட்களை விழுங்குவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்ட வேண்டும். தீங்கிழைக்கும் இணையச் சவால்களைக் (Internet challenges) கண்மூடித்தனமாக செய்து பார்ப்பது அல்லது வேண்டுமென்றே ஆபத்தான பொருட்களை உட்கொள்வது போன்ற ஆபத்துகளைப் பற்றி அவர்களிடம் பேச இது சரியான நேரம். இப்படிப்பட்ட உரையாடல்கள் உங்கள் குழந்தையுடன் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்க்க உதவுவதோடு, எந்த நிலையிலும் நீங்கள் அவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும்.
 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved