கீல்வாத மூட்டுவலி என்பது என்ன?

Apr 12, 2022

கீல்வாத மூட்டுவலி

மூட்டுவலி என்பது நமது உடலில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டுவலி வகைகள் உள்ளன, இதில் கீல்வாத மூட்டுவலி பரவலாகக் காணப்படும் வகைகளில் ஒன்று.

கீல்வாத மூட்டுவலி உங்களுக்கு கவலை தருவதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மற்றும் எரிச்சலூட்டுவதாகவும், மேலும் நீங்கள் செய்ய விரும்பும் செயல்களைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பதாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் பல மருத்துவ முன்னேற்றங்களின் விளைவாக,  சில மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலமும், உங்கள் வாழ்க்கை முறையை நல்லபடியாக அமைத்துக் கொள்வதன் மூலமுமே நீங்கள் நல்ல நிவாரணம் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது மிகவும் ஆறுதலான செய்தி.

கீல்வாதம் (OsteoArthritis) மிகவும் பொதுவாக நாட்பட்ட மூட்டு நிலை. இது “தேய்மான கீல்வாதம்” அல்லது “சிதைந்த கீல்வாதம்” என்றும் அறியப்படுகிறது. இந்த மருத்துவ நிலையில், உங்கள் மூட்டுகளில் உள்ள பஞ்சுபோன்ற, பாதுகாப்பு திசுவான குருத்தெலும்பு (cartilage) தேய்ந்து, நீட்டி வளைக்கும் திறனை இழக்கிறது. இப்படி குருத்தெலும்பு மெலிதாகிவிட்டாலோ அல்லது முற்றிலுமாக தேய்ந்துவிட்டாலோ, உங்கள் மூட்டுகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடொன்று உரச ஆரம்பிக்கும். வலி, வீக்கம், விறைப்பு மற்றும் சில சமயங்களில், மூட்டு இறுகுதல் அல்லது உடைதல் போன்ற உணர்வு போன்ற கீல்வாத அறிகுறிகளை இது ஏற்படுத்தும்.

கீல்வாதம் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம். ஆனாலும் இதன் பாதிப்பு பொதுவாக கை விரல்கள், தோள்பட்டை, முதுகெலும்பு, கழுத்து அல்லது கீழ் முதுகு, இடுப்பு, முழங்கால்கள் போன்ற உடற்பகுதிகளில் காணப்படுகிறது.

கீல்வாதம் யாரை பாதிக்கிறது?

கீல்வாதம் பெரும்பாலும் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது, ஆனாலும் இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அதிலும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முழங்கால் மூட்டுவலி அதிகமாக ஏற்படுகிறது.

கீல்வாதம் ஏற்படக் காரணம் என்ன?

கீல்வாதம் மூட்டுக்களின் சேதத்தினால் ஏற்படுகிறது, மற்றும் காலப்போக்கில் இதன் விளைவுகள் சேர்ந்து கொண்டே போகலாம். உங்களுக்கு வயதாக ஆக, உங்கள் மூட்டுகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கீல்வாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

மூட்டு சேதத்திற்கான பிற காரணங்கள்:

  • கிழிந்த குருத்தெலும்பு (cartilage), இடம்பெயர்ந்த மூட்டுகள் அல்லது தசைநார்(ligament) காயங்கள் போன்று கடந்தகாலத்தில் ஏற்பட்ட காயங்கள்

  • மூட்டு சிதைவு

  • உடல் பருமன்

  • நிற்கும்/உட்காரும்/நடக்கும் தோரணை சரியாக இல்லாமலிருத்தல்

கீல்வாதத்திற்கான ஆபத்து காரணிகள் (risk factors) யாவை?

சில ஆபத்து காரணிகள் உங்களுக்கு கீல்வாதம் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பின்வருபவை அதில் அடங்கும்:

  • குடும்பத்தாருக்கு இந்த மருத்துவ நிலை இருத்தல், குறிப்பாக பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள்

  • ஆண்களை விட பெண்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதவிடாய் நின்றவர்கள், மண்டியிடுதல், ஏறுதல், எடை தூக்குதல் அல்லது அதுபோன்ற செயல்களை செய்பவர்கள்.

  • அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள்

  • அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்கள்

  • நிற்கும்/உட்காரும்/நடக்கும் தோரணை சரியாக இல்லாமலிருத்தல்

  • நீரிழிவு அல்லது வேறு வகையான மூட்டுவலி போன்ற உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றொரு மருத்துவ நிலை இருத்தல்

எனக்கு கீல்வாதம் இருக்கிறதா என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?

அறிகுறிகள்

மூட்டு வலி தான் கீல்வாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறி. பொதுவாக, அழுத்தம், வலி போன்ற கீல்வாத மூட்டுவலி அறிகுறிகள் காலையில் தோன்றாது; நாளின் முடிவில், பல செயல்பாடுகளுக்குப் பிறகு, உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தையும் வலியையும் நீங்கள் உணரலாம். 

இதன் பிற அறிகுறிகள்:

விரிசல் விட்ட அல்லது அரைக்கும் மூட்டுகள்

• பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம்

• மூட்டை நகர்த்துவதில் சிரமம்

• காலப்போக்கில் செயல்பாடு இழப்பு அல்லது இயலாமை

மற்ற வகையான மூட்டு வலிகளைப் போல இல்லாமல், கீல்வாத வலி மற்றும் மூட்டு வீக்கம் காலப்போக்கில் மெதுவாக அதிகரிக்கும், அதனால் அதை ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொள்வது சிரமமாக இருக்கலாம், கவனமாக கண்காணிக்க வேண்டும்.

சோதனைகள் மற்றும் நோய் கண்டறிதல்

உங்களுக்கு கீல்வாதம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, உங்கள் மருத்துவர் உங்கள் அறிகுறிகளை பற்றி முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்வார், அத்துடன் உங்கள் மூட்டுகளை நன்கு பரிசோதிப்பார். உங்களின் வலிக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த எக்ஸ்-ரே (X-ray) எடுக்கச் சொல்லலாம். குருத்தெலும்பு அல்லது சுற்றியுள்ள தசைநார் கிழிந்துவிட்டதாக சந்தேகித்தால் மட்டுமே எம்ஆர்ஐ (MRI) எடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்துவார், இல்லையென்றால் பொதுவாக தேவையில்லை. கீல்வாதத்தைக் கண்டறிவதற்கென இரத்தப் பரிசோதனைகள் எதுவும் இல்லை.

சில சமயம், பிற நோய்களின் காரணமாக ஏற்படும் மூட்டுவலி, கீல்வாதம் என்று தவறாகக் கருதப்படலாம். இந்த நிலையில், ஒரு வாதநோய் நிபுணர் (Rheumatologist) உங்கள் நோய் கண்டறிந்து உங்களுக்கான சிறந்த சிகிச்சைத் திட்டத்தை பரிந்துரைக்கலாம்.


Also Read: Knowing When to Go to the Hospital


கீல்வாதத்திற்கான சிகிச்சைகளைப் பற்றி?

கீல்வாத வலியின் அறிகுறிகளை நிர்வகிப்பது தான் அதன் சிகிச்சைக்கான அடித்தளம். உங்கள் மூட்டு வலி மற்றும் விறைப்பைக் குறைப்பதும், நோய் முன்னேறுவதை தாமதப்படுத்துவதும், அதன் விளைவாக உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் தான் உங்களுக்கான சிகிச்சையின் குறிக்கோள்கள்.

வலி, விறைப்பு மற்றும் வீக்கத்தில் இருந்து உங்களுக்கு நிவாரணம் வழங்க பெரும்பாலும், ஓவர்-தி-கவுண்டர் (OTC) (அதாவது மருந்துச்சீட்டு இல்லாமலே கடையில் வாங்கும்) மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வீட்டு வைத்தியம் ஆகியவையே போதுமானதாக இருக்கும். மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் பயனற்றதாக இருந்தாலோ அல்லது வேறு சிகிச்சை முறைகள் இல்லையென்றாலோ, குறிப்பாக மேம்பட்ட நோய் நிலைகளில், அப்போது மட்டுமே, வலியைப் போக்கவும் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் அறுவை சிகிச்சை உதவியாக இருக்கும்.

பின்வருபவை சில மருத்துவ சிகிச்சை முறைகள்:

  • மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள் (ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி-எதிர்ப்பு மருந்துகள், NSAIDகள் உட்பட மேற்பூச்சு வலி மருந்துகள் மற்றும் வாய்வழி வலி நிவாரணிகள்).

  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடு உங்கள் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், விறைப்பைப் போக்கவும் உதவும். ஒரு நாளில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும். நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற மென்மையான, அதிர்வு இல்லாத செயல்பாடுகளை மேற்கொள்ளவும். டாய்-சி (Tai-Chi)  மற்றும் யோகா போன்றவை மூட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும் உதவும்.

  • தசை வலி மற்றும் விறைப்புத் தன்மையைப் போக்க அவ்வப்போது சூடு மற்றும் குளிர் சிகிச்சை (hot-and-cold treatment) செய்யவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை, ஒரு நாளைக்கு பல முறை சேதமான மூட்டுகளில் சூடான அல்லது குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துங்கள்.

  • உடற்பயிற்சி சிகிச்சை (ஃபிசியோதெரபி) (Physiotherapy) மேற்கொள்ளவும்

  • எடையைக் குறைக்கவும் (அதிக எடை இருந்தால்).

  • ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால், அது வீக்கத்தைக் குறைப்பதுடன் கீல்வாத அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். மேலும், வைட்டமின் சி, வைட்டமின் டி, பீட்டா கரோட்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ள உணவுகளை உண்பதும் நன்மை தரும்.

  • நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

  • பிரேஸ்கள் (braces), ஆர்த்தோடிக்ஸ் (orthotics), ஷூ செருகல்கள் (shoe inserts), கம்பு அல்லது வாக்கர் போன்ற ஆதரவு சாதனங்களை பயன்படுத்துங்கள்.

  • உள்-மூட்டு ஊசி சிகிச்சைகளை (ஸ்டீராய்டு, ஹைலூரோனிக் அமிலம் "ஜெல்") மேற்கொள்ளவும்

  • மாற்று மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் துணை மருந்துகள் ஆகியவை உதவலாம்: உதாரணமாக, மீன் எண்ணெய், கிரீன் டீ, இஞ்சி போன்றவை. மற்ற மாற்று சிகிச்சை முறைகள் பின்வருமாறு: குத்தூசி மருத்துவம் (acupuncture), உடல் சிகிச்சை (physiotherapy), மசாஜ் சிகிச்சை போன்றவை

  • போதுமான தூக்கம் உங்கள் தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதுடன், வீக்கத்தையும் வலியையும் குறைக்கும். 

கீல்வாத மூட்டுவலி என்பது முற்றிலுமாக குணப்படுத்த முடியாத, நாட்பட்ட மருத்துவ நிலை என்றாலும், அதற்கான சிகிச்சை முறைகள் எளிமையானவை; அவற்றை தவறாமல் பின்பற்றி நோயை நன்கு நிர்வகித்து கட்டுப்படுத்தலாம், உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்க மூட்டுவலி ஒரு தடையாக இருக்க வேண்டாம்! இடைவிடாத வலிகள் மற்றும் தொல்லைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, மீண்டும் ஒரு சுறுசுறுப்பான, வலியற்ற வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குங்கள்!

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved