மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அறியுங்கள் – தாமதிக்காமல் செயல்படுங்கள்!

May 25, 2022

Know the Acute Symptoms of a Heart Attack - Act Soon!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக அளவில் 31% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன, மேலும் 85% இருதய இறப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக்கினால் ஏற்படுகின்றன. ஆனால் அந்த இறப்புகளில் பலவற்றை நம்மால் தடுக்க முடியும் - தாமதிக்காமல் செயல்படுவதன் மூலம்!

மாரடைப்பு என்றால் என்ன?

தமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன்-செறிவான இரத்தத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் பொழுது, இதய திசுக்கள் இறக்கத் தொடங்குவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

மாரடைப்பு என்பது, திரைப்படங்களில் நாம் பார்ப்பது போல, ஒருவர் மார்பைப் பிடித்துக் கொண்டு கீழே விழுவார், அது திடீரென ஏற்படும் மற்றும் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். 

உண்மை என்னவென்றால், சில மாரடைப்புகள் திடீரென ஏற்படலாம், தீவிரமாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலானவை மெதுவாகத் தொடங்கி, மார்பின் மையத்தில் லேசான வலி அல்லது அசௌகரியம் இருப்பது போலத் தோன்றும். அப்படிப்பட்ட உணர்வு ஏற்படும் போது என்ன நடக்கிறது என்று உறுதியாக தெரியாமல் நாம் குழப்பமடைய வாய்ப்புள்ளது. அசௌகரியம் (மற்றும் பிற அறிகுறிகள்) கூட வந்து போகலாம். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு கூட அந்த அறிகுறிகளை அடையாளம் காண தெரியாது, ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் மாறுபடலாம். அதனால் மாரடைப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், நீங்கள் மருத்துவரை அணுகி அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.

மாரடைப்பைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் இதோ:

 • மூச்சுத் திணறல் - மூச்சுத் திணறல் என்பது மாரடைப்புக்கு முன்பு ஏற்படும் ஒரு பொதுவான மற்றும் மிகவும் பயமுறுத்தும் அறிகுறியாகும். இது திடீரென்றும், எச்சரிக்கை இல்லாமலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமலும் தோன்றலாம் (அதாவது, எந்த உடல் செயல்பாடுகளுக்கும் பிறகு ஏற்படாமல்). உதாரணமாக, நீங்கள் படிக்கட்டுகளில் ஓடி மேலே செல்லும் போது ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் போல, சும்மா உட்கார்ந்திருக்கும் போதே ஏற்படலாம்.
 • கடுமையான வியர்வை – உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவன கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும் போது படபடப்பினால் கடும் வியர்வை தோன்றுமே, அந்த மாதிரி, எந்த அழுத்தமும் இல்லாமலே உங்களுக்கு வியர்க்கத் தொடங்கலாம்.
 • தூக்கம் கெடுதல் - மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தின் நடுவில் மூச்சு விட முடியாமல் எழுந்ததை அடிக்கடி நினைவு கூர்வார்கள். மாரடைப்பின் போது இது போல, மேல் சுவாசப்பாதையை அழுத்தி, இதயத்தின் அத்தியாவசிய இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
 • மிகுந்த சோர்வு – நாம் எல்லோருமே பல சமயங்களில் வெகு நேரம் கண் விழித்து வேலை பார்க்கிறோம் - மற்ற எல்லோரையும் கவனித்துக்கொண்டு ஆனால் நம்மை சரியாக கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில், நாம் நன்றாக தூங்கி சரியான உணவைச் சாப்பிட்டாலும் கூட, நமக்கு ஆற்றல் குறைகிறது, அந்த நிலையில் ஆரவாரம் இல்லாமல் மாரடைப்பு தாக்குகிறது.
 • வயிற்றுப் பிடிப்புகள் - "நான் சாப்பிட்ட ஏதோ ஒன்று எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை!" என்று சில சமயம் நினைத்து நாம் அலட்சியமாக ஒதுக்கி விடுவது, பல நேரங்களில் மாரடைப்பில் முடிகிறது. எனவே நெஞ்செரிச்சல் அல்லது மோசமான குடல்பூச்சி (அதாவது ஃபூட் பாய்ஸனிங்) என நீங்கள் லேசாக நினைப்பது உண்மையில் மிகவும் மோசமான இதயப் பிரச்சினையாக இருக்கலாம்.
 • மார்பு வலி – பொதுவாக ஆண்களுக்கு மாரடைப்பு என்பது மார்பின் மீது ஒரு யானை அமர்ந்திருப்பது போன்ற மிக கனமான உணர்வாக தோன்றலாம் – ஆனால் பெண்களுக்கு மாரடைப்பு என்பது கழுத்து, கைகளின் மேற்பகுதி அல்லது தாடைப் பகுதியில் கூர்மையான அல்லது மந்தமான, படிப்படியாக அதிகரிக்கும் வலியாக தோன்றலாம். வலிக்கு பதிலாக, பெண்கள் இறுக்கமான அசௌகரியமாக கூட இதை உணரலாம், இது பொதுவாக மார்பின் இடது பக்கத்தில் மட்டும் இல்லாமல் முழு மார்பு முழுவதும் கூடத் தோன்றலாம்.
 • தாடை வலி இது அரிதாக ஏற்படுகிறது என்றாலும், இதுவும் மாரடைப்புக்கான ஒரு எச்சரிக்கை அறிகுறி. ஏனென்றால், நமது இதயத்தில் பிரச்சனை ஏற்படும் போது, அந்தப் பகுதியில் உள்ள நரம்புகள் செயலிழக்கின்றன – அதனால் அந்த பகுதியில் அல்லாமல் மற்ற பகுதிகளில் நாம் வலியை உணர்கிறோம். இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் போது, பெரும்பாலும் தாடை வலி என்பது கவனிக்கப்படாத ஒரு அறிகுறியாக உள்ளது.
 • விரைவான இதயத் துடிப்பு – நாம் மிகவும் பதட்டமாக உள்ள சந்தர்ப்பங்களில் விரைவான இதயத் துடிப்பு மற்றும் வியர்வை போன்றவை ஏற்படும். ஆனால் மன அழுத்தம் ஏதும் இல்லாத நிலையில் கூட, காரணமே இல்லாமல் திடீரென மாரடைப்பு தாக்குவதால், அதை பதட்டத் தாக்குதல் என்று நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடும்.
 • குமட்டல் - பல காரணங்களினால் குமட்டல் ஏற்படலாம், அதனால் பொதுவாக இதை நாம் மாரடைப்பின் ஒரு எச்சரிக்கை அறிகுறியாக நினைப்பதில்லை. மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு குமட்டல் ஏற்படலாம், ஆனால் குமட்டலுக்கு பின் உடனடியாக மாரடைப்பு ஏற்படாததால், அது நாம் சாப்பிட்ட ஏதோ ஒன்றின் காரணமாக தோன்றுவதாக நாம் தவறாக நினைத்துக் கொள்கிறோம்.
 • இரண்டு கைகளிலும் வலி - மாரடைப்பு ஏற்படும் போது, உங்கள் இடது கையில் கூர்மையான வலியை உணரலாம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் இரண்டு கைகளிலும் கூட இந்த கூர்மையான வலியை அனுபவிக்கலாம். அதனால் நீங்கள் ஒரு கையிலோ அல்லது இரண்டிலுமோ வலுவான வலியை உணர்ந்தால், அதை உடனடியாக கவனிக்க வேண்டும், குறிப்பாக மாரடைப்பு தொடர்பான பிற அறிகுறிகளுடன் அதை உணரும்போது.

Also Read: Knowing When to Go to the Hospital


மாரடைப்பு ஏற்படும் போது மக்கள் ஏன் அதை உடனடியாக கவனிப்பதில்லை?

காலம் பொன்னானது! 

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அனுபவிப்பவர்கள், பெரும்பாலும் நிலைமையின் தீவிரத்தன்மையை ஏற்க மறுக்கிறார்கள், இது "தவறான எச்சரிக்கை (false alarm)" ஆக இருக்கலாமோ என்று சங்கடப்படுகிறார்கள், அதனால் "காத்திருந்து பார்க்கலாமே" என்ற அணுகுமுறையை மேற்கொள்கிறார்கள்.

சிலருக்கு மாரடைப்பு குறித்து மிகுந்த பயம் இருப்பதால், தங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்பதை நம்ப மறுத்து, அது இல்லை என்று சொல்லிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுவது இயற்கை தான், ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை. உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகள் மாரடைப்பினால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவற்றைப் பரிசோதிப்பதாகும், எனவே ஆம்புலன்ஸ் போன்ற உங்கள் உள்ளூர் அவசர மருத்துவ சேவைகளை உடனே அழைக்கவும்.
தாமதிக்காமல் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்! 

மாரடைப்பின் போது, நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் அதிக அளவிலான இதய தசைகள் இறக்கின்றன. உடனடியாக எமர்ஜென்சியை அழைப்பதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்.

மாரடைப்பை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் மூலம் நாம் இதை தவிர்த்துக் கொள்ளலாம்:

 • புகைபிடிக்க வேண்டாம், மற்றும் வேறொருவர் புகை பிடிக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும்.
 • மது அருந்துவதை கட்டுப்படுத்தவும்
 • உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை, அதிக கொலஸ்ட்ரால் அளவு இருந்தால் அவற்றை கட்டுப்படுத்தவும்.
 • டிரான்ஸ்ஃபேட் , சோடியம் (உப்பு) மற்றும் செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
 • உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்; தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
 • ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.
 • உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும், தியானம் அல்லது யோகா நன்மை அளிக்கும்
 • முறையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
 • ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டபடி உள்ள மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதய நோய் இருப்பது குறித்து பதட்டப்பட வேண்டாம், உங்கள் இதயம் அதன் திறனுக்கு ஏற்றவாறு செயல்படவில்லை, தேவையான அளவு இரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்பதையே இது குறிக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே இது கண்டறியப்பட்டால், சிகிச்சை மூலம் இதனை நிர்வகித்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு ஆகியவை நல்ல வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுக்க உதவும்.

Comments - 1

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © 2017 NMC Pondy. All Rights Reserved